மாநில செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது: தென்மாவட்டங்களில் அதி கனமழை + "||" + Rainwater infiltration into Thiruchendur Murugan Temple: Heavy rains in the southern districts

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது: தென்மாவட்டங்களில் அதி கனமழை

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது: தென்மாவட்டங்களில் அதி கனமழை
தென்மாவட்டங்களில் பெய்த அதி கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது.
நெல்லை,

தமிழகத்தில் கடந்த மாதம் 25-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது.

அதன்பிறகு அவ்வப்போது காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி பலத்த மழை பெய்து வருகிறது.

அதி கனமழை

இந்த நிலையில் தெற்குவங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும் என்றும், இதன் காரணமாக தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.


ஆனால் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறவில்லை. இருந்தபோதிலும் நேற்று தென்மாவட்டங்களில் அதி கனமழை கொட்டி தீர்த்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாகவே தொடர்ந்து சாரல் மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று காலையிலும் சாரல் மழை தொடர்ந்தது. காலை 9 மணிக்கு பிறகு இந்த சாரல் மழை மாவட்டம் முழுவதும் வலுத்து கனமழையாக பெய்ய தொடங்கியது.

இதனால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் ஆறாக பாய்ந்து ஓடியது. இந்த மழை தொடர்ந்து கொட்டியதால் தூத்துக்குடி மாநகரம் முழுவதும் மழை வெள்ளத்தில் தத்தளித்தது.

தூத்துக்குடியில் ராஜீவ்நகர், பால்பாண்டி நகர், டூவிபுரம், தாளமுத்துநகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார்5 ஆயிரம் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.

தூத்துக்குடி கீழுர் ரெயில் நிலையத்தில் தண்டவாளமே கண்ணுக்கு தெரியாத அளவுக்கு மழைநீர் தேங்கி நின்றது. தூத்துக்குடி அரசு மருத்துவமனைகளுக்குள் மழைநீர் புகுந்தது.

அதுபோல தூத்துக்குடி ரெயில்வே போலீஸ் நிலையம் முழுவதும் தண்ணீர் புகுந்தது. இதனால் போலீசார் ஆவணங்களை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர். கனமழையால் காலை 11 மணி முதல் பள்ளிகளுக்கும், மதியத்துக்கு பிறகு கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

திருச்செந்தூர் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது

திருச்செந்தூரில் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. இதனால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் மழை நீர் புகுந்தது.

மேலும் கோவில் கிழக்கு பகுதியில் உள்ள கிரிபிரகாரத்தில் மழை நீர் முழங்கால் அளவு தேங்கியது. பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் கோவிலில் தேங்கிய மழை நீர் அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால் சுவாமி மூலவர் இருக்கும் மகா மண்டபத்திற்குள் மழை நீர் செல்லவில்லை.

மேலும் கோவில் நாழிக்கிணறு கார் நிறுத்தும் இடத்தில் கார்கள் செல்ல முடியாத அளவுக்கு மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர் நகர் பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

நெல்லை, தென்காசி

இதேபோல் நெல்லை மாவட்டத்திலும் கனமழை பெய்தது. இதனால் நெல்லை மாநகரில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் அருங்காட்சியக வளாகத்தில் 100 ஆண்டுகள் பழமையான வாகை மரம் வேரோடு சாய்ந்தது. இந்த மரம் சுற்றுச்சுவரை உடைத்ததுடன், அருகில் கல்லூரி மைதானத்தில் உள்ள சைக்கிள் நிறுத்தம் இடத்தின் மீதும் விழுந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன. மேலும் மரத்தை சுற்றி நிறுவப்பட்டிருந்த அரிய வகை சிலைகளும் சாய்ந்து சேதம் அடைந்தன.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை, தென்காசி, ஆலங்குளம், பாவூர்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது.

திண்டுக்கல், தேனி

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று மதியம் 3 மணிக்கு பலத்த மழை பெய்ய தொடங்கியது. இதைத் தொடர்ந்து இரவு வரை நல்ல மழை பெய்தபடி இருந்தது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

தேனியில் நேற்று மாலை 3.30 மணியளவில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. 1 மணி நேரம் இந்த கன மழை நீடித்தது. தொடர்ந்து இரவு வரை சாரல் மழை பெய்தது. இதேபோல் போடி, உத்தமபாளையம், கம்பம், கூடலூர், சின்னமனூர் உள்பட மாவட்டத்தின் பல இடங்களிலும் நேற்று மாலை மழை பெய்தது.

போடி பகுதியில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால் போடி மெட்டு சாலையில் மரங்கள், ராட்சத பாறைகள் விழுந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. பாறைகளும் அகற்றப்பட்டன. இதையடுத்து நேற்று இந்த சாலை வழியாக கேரள மாநிலத்துக்கு வாகன போக்குவரத்துமீண்டும் தொடங்கியது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் காலையிலிருந்து பரவலான மழை பெய்து வருகிறது. மதியத்திற்கு மேல் பலத்த மழையும் பெய்தது. கீரமங்கலத்தில் 2 வீடுகள் இடிந்து விழுந்தது.

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் இன்றும் (வெள்ளிக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மழை எதிரொலியாக கோட்டைப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார கடலோர பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீன் வளத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி

திருச்சியில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் பகல் 1 மணி அளவில் பலத்த மழை பெய்தது. அதன்பிறகு சிறிதுநேர இடைவெளியில் விட்டு, விட்டு பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இடைவிடாமல் பெய்த மழையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

ஏற்கனவே கடந்த சில நாட்களாக பெய்த மழையால் ஒருசில தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீர் வடிய தொடங்கிய நிலையில், தற்போது திருச்சியில் மீண்டும் மழை பெய்து வருவது பொதுமக்களை கவலை அடைய செய்துள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் மதியம் 1.15 மணிக்கு திடீரென்று இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை சுமார் அரை மணி நேரம் பெய்தது. மழை பெய்தபோது பலத்த காற்றும் வீசியது. இதையடுத்து மதியம் 2.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரம் பெய்தது. பின்னர் விட்டு, விட்டு மழை தூறிக் கொண்டிருந்தது.

அரியலூர் மாவட்டத்தில் நேற்று காலை முதலே பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இடையிடையே விட்டுவிட்டு மழை பெய்தவாறு இருந்தது. மதியம் 1 மணியளவில் மழை பெய்தபோது பலத்த காற்று வீசியது. மாலையிலும் தொடர்ந்து மழை பெய்தவாறு இருந்தது.

மதுரை

மதுரையில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 3 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழையாக நீடித்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களில் இருந்து வீட்டிற்கு சென்றவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

ராமேசுவரம், ராமநாதபுரம் பகுதியில் 2-வது நாளாக நேற்று காலையில் இருந்தே கன மழை பெய்ய தொடங்கியது. பகல் முழுவதும் விட்டு விட்டு பெய்த வண்ணமாக இருந்தது. மழையால் ராமேசுவரம் பஸ் நிலையம் செல்லும் ராம தீர்த்தம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் அதிகஅளவில் குளம்போல் தேங்கி நின்றது. அப்துல் கலாம் மணிமண்டபம் சாலை முன்பும் மழைநீர் தேங்கி நின்றது.

விருதுநகர் மாவட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், ஆலங்குளம், வத்திராயிருப்பு, தாயில்பட்டி, வெம்பக்கோட்டை, ஏழாயிரம் பண்ணை, தளவாய்புரம், சேத்தூர், காரியாபட்டி, திருச்சுழி, அருப்புக்கோட்டை, சாத்தூர், இருக்கன்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மழை வெளுத்து வாங்கியது. சில இடங்களில் 3 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாமல் பெய்தது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர்மழை காரணமாகவும், சில மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருப்பதாலும் தென் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருக்கிறது.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், விருதுநகர், திண்டுக்கல், தஞ்சை, தேனி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

திருச்சி, மதுரை, ராமநாதபுரம், திருவாரூர், சிவகங்கை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டு இருக்கிறது.

‘ரெட் அலர்ட்’

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலான நிலவரப்படி, 25 செ.மீ. அதி கனமழை பதிவாகியது. ஏற்கனவே திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்' நிர்வாக ரீதியாக விடுக்கப்பட்டு இருந்த நிலையில், அதி கனமழை பெய்ததன் காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு நேற்று மாலையில் ‘ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டது. இந்த அறிவிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணி வரை பொருந்தும் என்று ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்றும் கனமழை

அதன் தொடர்ச்சியாக வருகிற 29-ந்தேதி (திங்கட்கிழமை) வரை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. அதன்படி, தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், இன்று (வெள்ளிக்கிழமை) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், மதுரை, புதுக்கோட்டை, தேனி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை (சனிக்கிழமை) காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், சேலம், நீலகிரி, கோவை, ஈரோடு, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை..!!
சென்னையில் தற்போது பல்வேறு இடங்களில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
2. சென்னையில் பரவலாக பெய்த கனமழை தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது
சென்னையில் நேற்று பரவலாக பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
3. மத்திய குழு இன்று தமிழகம் வருகை; 11 மாவட்டங்களில் நேரில் ஆய்வு
கனமழையால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட மத்திய குழு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் வருகிறது.
4. கனமழை: சென்னையில் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்
சென்னையில் இன்று காலை விட்டு விட்டு பெய்த மழையால் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
5. ஆந்திராவில் கன மழையால் 4 மாவட்டங்கள் கடும் பாதிப்பு : 17 பேர் பலி; 30 பேர் மாயம்
அந்தமான் கடல் பகுதியில் உருவாகிய தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து ஆந்திரா நோக்கி திரும்பியதால் அங்கு கன மழையால் 4 மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. 17 பேர் பலியாகி உள்ளனர்