சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு நேரடி விமான சேவை - மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்


சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு நேரடி விமான சேவை - மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
x
தினத்தந்தி 26 Nov 2021 2:59 AM GMT (Updated: 26 Nov 2021 2:59 AM GMT)

சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு நேரடி விமான சேவை ஏற்படுத்தித் தரவேண்டும் என மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

புலம் பெயர்ந்த தமிழர்கள் வந்து செல்ல சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு நேரடி விமான சேவை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்து மந்திரி ஜோதிராதித்யா சிந்தியாவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

“சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ள தமிழர்கள் மற்றும் எங்கள் மாநிலத்தில் இருந்து சென்ற பிற விமானப் பயணிகள், கொரோனா பரவல் கால கட்டத்தில் இந்தியாவிற்கு வந்திருந்தனர். தற்போது அவர்கள் திரும்பிச் செல்வதற்கான நேரடி விமான சேவை இல்லாததால் அவர்கள் பெரிய தவிப்பிற்கு ஆளாகி இருக்கின்றனர். அந்நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வர விரும்பும்நேர்வுகளிலும் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர்.

அவர்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டுமானால், துபாய், தோகா, கொழும்பு வழியாக செல்ல வேண்டியதுள்ளது. இது மிக நீண்ட தூர பயணம் என்பதோடு அதிக செலவை ஏற்படுத்தும் பயணமாகவும் இருப்பதால் அவர்கள் மிகுந்த அசவுகரியகத்திற்கு ஆளாகிறார்கள். சிங்கப்பூர், மலேசியா நாடுகளுடன் தற்காலிக கொரோனா கால போக்குவரத்து ஒப்பந்தங்களை மத்திய அரசு செய்யாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே விரைவில் சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளுடன் தற்காலிக கொரோனா கால போக்குவரத்து ஒப்பந்தங்களை ஏற்படுத்தி, தற்காலிக விமான போக்குவரத்து சேவைகளை வழங்கி, அந்த நாடுகளில் உள்ள புலம் பெயர்ந்த தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story