தூத்துக்குடி: மழை பாதிப்பு பகுதிகளை பார்வையிட்ட கனிமொழி எம்.பி -அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்


தூத்துக்குடி: மழை பாதிப்பு பகுதிகளை பார்வையிட்ட கனிமொழி எம்.பி -அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
x
தினத்தந்தி 26 Nov 2021 9:57 AM GMT (Updated: 26 Nov 2021 9:57 AM GMT)

தூத்துக்குடியில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கனிமொழி எம்.பி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்டனர்.

தூத்துக்குடி:

தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நேற்று முதல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது.
 
குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் நேற்று அதிக கனமழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று அதிகாலை தொடங்கிய மழை பிற்பகலில் கனமழையாகவும், அதன் பின்னர் அதிகன மழையாகவும் கொட்டித் தீர்த்தது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள தனசேரகன் நகர், பாலா நகர், குறிஞ்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று வீடுகளுக்குள் முட்டளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்குள்ள 2,500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் காலையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

பிரையன்ட் நகரில் உள்ள 10 தெருக்களிலும், போல்டன்புரத்தில் 4 தெருக்களிலும் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் சென்றது. அமுதா நகர், சிதம்பர நகர், ராஜீவ் நகர், பாரதி நகர், முனியசாமி புரம், ராஜகோபால் நகர், அண்ணா நகர், நிகிலேசன் நகர், சி.என்.டி. காலனி, லூர்தம்மாள்புரம், செயின்ட் மேரீஸ் காலனி, ஆரோக்கியபுரம், டூவிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதனால் விடிய விடிய அவர்கள் கண் விழித்து தூங்க முடியாமல் தவித்தனர். அவர்கள் வேலைகளுக்கும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்ல முடியாமலும் அவதிப்பட்டனர்.

கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக புங்கவர்நத்தம் கிராமத்தில் உள்ள கண்மாய் நிரம்பி மழைநீர் ஊருக்குள் புகுந்ததால் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. விளாத்திகுளம், எட்டயபுரம், கழுகுமலை, கயத்தாறு, கடம்பூர் உள்ளிட்ட பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளது.

தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் மழை நீர் முட்டளவு தேங்கி நிற்பதால் நோயாளிகளை பார்க்க உறவினர்கள் செல்ல முடியாமல் தவித்தனர். இன்று காலை பணிக்கு சென்ற டாக்டர்கள், நர்ஸ்கள் இருசக்கர வாகனங்களில் சென்றபோது தண்ணீரில் மூழ்கி மோட்டார் சைக்கிள்கள் பழுதானது.

இதனால் பலர் கார்கள் மூலமும், வாடகை ஆட்டோக்கள் மூலமும் மருத்துவமனைக்கு சென்றனர். இதே போல் பணி முடிந்து திரும்பியவர்களும் இதேபோல் வீடுகளுக்கு சென்றனர்.

கனமழை காரணமாக தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் உள்ள தண்டவாளங்களை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் நேற்று மாலை 5 மணிக்கு செல்ல வேண்டிய மைசூர் எக்ஸ்பிரஸ் நள்ளிரவு 12 மணிக்கும், இரவு 8 மணிக்கு செல்ல வேண்டிய முத்துநகர் எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை 3.20 மணிக்கும் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

சென்னையில் இருந்து இன்று காலை வந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ் வழக்கமாக கீழுர் ரெயில் நிலையத்தில் நிற்கும். ஆனால் இன்று மழை காரணமாக 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேலூர் ரெயில் நிலையத்தில் பயணிகளை இறக்கியது.

திருச்செந்தூர்- தூத்துக்குடி சாலையில் வரண்டியவேல் தரைப்பாலத்தில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடியில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கனிமொழி எம்.பி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்டனர்.


Next Story