குத்தகைக்கு விடுவதற்கு பதில் ராணுவ சொத்துகளை உள்கட்டமைப்பு வசதிகளுக்கு பயன்படுத்தலாம் ஐகோர்ட்டு கருத்து


குத்தகைக்கு விடுவதற்கு பதில் ராணுவ சொத்துகளை உள்கட்டமைப்பு வசதிகளுக்கு பயன்படுத்தலாம் ஐகோர்ட்டு கருத்து
x
தினத்தந்தி 26 Nov 2021 6:58 PM GMT (Updated: 26 Nov 2021 6:58 PM GMT)

ராணுவத்துக்கு சொந்தமான சொத்துகளை வணிக பயன்பாட்டுக்கு குத்தகைக்கு விடுவதற்கு பதில் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு பயன்படுத்தலாம் என சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை ரத்தன் பஜார், ஈவினிங் பஜார் உள்ளிட்ட இடங்களில் ராணுவத்துக்குச் சொந்தமான இடங்கள் உள்ளன. அந்த இடங்களை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு ராணுவ நிர்வாகம் குத்தகைக்கு விட்டது. அதில் முன்னாள் ராணுவ மேஜர் உள்ளிட்ட 3 பேருக்கு பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் உரிமம் வழங்கியது.

இந்த நிலங்களுக்கான வாடகை ரூ.18 கோடியே 56 லட்சம் பாக்கி வைக்கப்பட்டதால், நிலத்தை காலி செய்யும்படி இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு ராணுவ சொத்து நிர்வாக அதிகாரி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து, பெட்ரோல் நிலையத்தை நடத்திவரும் முன்னாள் ராணுவ மேஜர் உள்பட 3 பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

ஒப்படைக்க வேண்டும்

இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். அப்போது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல், ‘ராணுவ நிர்வாகத்துடன் வாடகை தொடர்பாக பிரச்சினைகள் உள்ளதால், அந்த இடத்தில் பெட்ரோல் விற்பனை நிலையத்தை தொடர எண்ணெய் நிறுவனம் விரும்பவில்லை’ என்றார்.

இதையடுத்து, ‘இந்த நிலம் தொடர்பாக குத்தகை ஒப்பந்தம் ஆயில் நிறுவனத்துக்கும், ராணுவ நிர்வாகத்துக்கும் இடையிலானது. இந்த வழக்கை தொடர மனுதாரர்களுக்கு உரிமை இல்லை. 3 பெட்ரோல் நிலையங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்குவதை ஆயில் நிறுவனம் நிறுத்த வேண்டும். 2 மாதங்களுக்குள் நிலத்தை காலி செய்து ராணுவத்திடம் ஒப்படைக்கவேண்டும்’ என்று கூறி வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

முடியவில்லை

மேலும், ‘நிலத்துக்குரிய குத்தகை தொகையை ராணுவ நிர்வாகத்தால் வசூலிக்க முடியவில்லை. எனவே, வணிக பயன்பாட்டுக்கு குத்தகைக்கு விடுவதற்கு பதில் அந்த சொத்துகளை ராணுவ உள்கட்டமைப்பு வசதிகளுக்கு பயன்படுத்தலாம்’ என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

Next Story