எம்.ஜி.சக்கரபாணியின் மகள் லீலாவதி மரணம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இரங்கல்


எம்.ஜி.சக்கரபாணியின் மகள் லீலாவதி மரணம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இரங்கல்
x
தினத்தந்தி 26 Nov 2021 7:10 PM GMT (Updated: 26 Nov 2021 7:10 PM GMT)

எம்.ஜி.ஆருக்கு ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கிய அவரது அண்ணன் மகள் லீலாவதி சென்னையில் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் மூத்த சகோதரர் எம்.ஜி.சக்கரபாணியின் மகள் லீலாவதி (வயது 72). 1984-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். உடல்நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவருக்கு தனது ஒரு சிறுநீரகத்தை லீலாவதி தானமாக வழங்கினார்.

அதன்பிறகு, எம்.ஜி.ஆரும் சில ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். லீலாவதியின் கணவர் டாக்டர் ரவீந்திரன் இறந்த பிறகு, தனது இளைய மகளுடன் சென்னை பெருங்குடியில் உள்ள இல்லத்தில் அவர் வசித்து வந்தார். அவரது மூத்த மகள் மஸ்கட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று அதிகாலை 1.30 மணியளவில் வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்ற லீலாவதி வெகுநேரம் வெளியே வரவில்லை.

அஞ்சலி

அதன்பிறகு, அவரது மகளும், பேரனும் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, லீலாவதி மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

லீலாவதியில் உடல் பெருங்குடியில் உள்ள மகள் வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

லீலாவதி உடலுக்கு, அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். உறவினர்கள், நண்பர்கள், அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்திய நிலையில், நேற்று மாலை அவரது உடல் பெருங்குடி மயானத்தில் தகனம் செய்ய இருந்தது. ஆனால், நேற்று சென்னையில் பெய்த கனமழையால் பெருங்குடி மயானத்தை தண்ணீர் சூழ்ந்திருந்தது. இதனால், அவரது உடல் பெசன்ட்நகர் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. அவரது சிதைக்கு பேரன் ஹனிரூத் தீ மூட்டினார்.

எம்.ஜி.ஆருக்கு தனது ஒரு சிறுநீரகத்தை தானம் செய்த லீலாவதி, 37 ஆண்டுகளாக உடல் ஆரோக்கியத்துடன் மகள் வீட்டில் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இரங்கல்

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

எம்.ஜி.ஆர். 1984-ல் நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவருக்கு தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை அளித்து, புரட்சி தலைவரை வாழவைத்த போற்றுதலுக்குரிய பண்பாளர் லீலாவதி 37 ஆண்டுகள் இப்பூவுலகில் ஒரு சிறுநீரகத்தோடு வாழ்ந்து, இயற்கை எய்தியை அறிந்து புரட்சி தலைவரின் கோடானு கோடி அன்பு தொண்டர்கள் அனைவரது நெஞ்சங்களும் மிகுந்த வேதனை கொள்கிறது.

லீலாவதியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உற்றார்-உறவினர்களுக்கும் இந்த துயரத்தை தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்கவேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சசிகலா, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருச்சி தொகுதி எம்.பி. சு.திருநாவுக்கரசர் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story