ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க கோரி பா.ஜ.க. விவசாய அணி ஆர்ப்பாட்டம்


ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க கோரி பா.ஜ.க. விவசாய அணி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Nov 2021 7:16 PM GMT (Updated: 26 Nov 2021 7:16 PM GMT)

ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க கோரி பா.ஜ.க. விவசாய அணி ஆர்ப்பாட்டம் மாட்டு வண்டி மூலம் பங்கேற்றனர்.

சென்னை,

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். பெட்ரோல்-டீசல் மீதான மாநில அரசின் வரியை குறைத்து, விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பா.ஜ.க. விவசாய அணி சார்பில் தமிழகம் முழுவதும் 30 இடங்களில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க.வினர் மாட்டு வண்டி மூலம் பங்கேற்றனர்.

சென்னையில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாட்டு வண்டி ஆர்ப்பாட்ட மேடையாக பயன்படுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய அணி மாவட்ட தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். இதில் தமிழக பா.ஜ.க. துணைத் தலைவர்கள் எம்.என்.ராஜா, வி.பி.துரைசாமி பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், சென்னை கோட்ட பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன் உள்பட நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் எம்.என்.ராஜா பேசும்போது, ‘ தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று விடுத்துள்ள கோரிக்கையை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 நாட்களில் நிறைவேற்றி தருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படி நிறைவேற்றவில்லை என்றால் இந்த கோரிக்கை நிறைவேறும் வரை நாங்கள் ஓயமாட்டோம்’ என்றார்.

Next Story