‘அம்மா உணவகம்' என்ற பெயரை இருட்டடிப்பு செய்ய சமுதாய உணவகங்களை ‘கலைஞர் உணவகம்' என்ற பெயரில் அமைப்பதா?


‘அம்மா உணவகம் என்ற பெயரை இருட்டடிப்பு செய்ய சமுதாய உணவகங்களை ‘கலைஞர் உணவகம் என்ற பெயரில் அமைப்பதா?
x
தினத்தந்தி 26 Nov 2021 10:53 PM GMT (Updated: 26 Nov 2021 10:53 PM GMT)

‘அம்மா உணவகம்' என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் நோக்கத்தில் புதிதாக அமைக்க உள்ள 500 சமுதாய உணவகங்களுக்கு 'கலைஞர் உணவகம்' என பெயர் வைப்பதா? என்று ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்தியாவில் மாதிரி சமுதாய சமையல் கூடம் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து டெல்லியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழக உணவுத்துறை அமைச்சர், வருங்காலத்தில் 500 சமுதாய உணவகங்கள் "கலைஞர் உணவகம்" என்ற பெயரில் அமைக்கப்பட உள்ளதாக பேசியுள்ளது "அம்மா உணவகம்" என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் நோக்கம் கொண்டதாக, அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டதாக உள்ளது. இதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2013-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அம்மா உணவகங்கள் படிப்படியாக பிற மாவட்டங்களுக்கும் நீட்டிக்கப்பட்டன.

இலவச உணவு

தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 700 அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன. அம்மா உணவகங்களில் ஒரு இட்லி ரூ.1-க்கும், பொங்கல் ரூ.5-க்கும், கலவை சாதங்கள் ரூ.5-க்கும், தயிர் சாதம் ரூ.3-க்கும், பருப்புடன் கூடிய இரண்டு சப்பாத்தி ரூ.3-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதுதவிர பெருமழை, வெள்ளம், புயல் காலங்களிலும், கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்தபோதும் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.

அரசியல் உள்நோக்கம்

இந்த சூழ்நிலையில், ‘அம்மா உணவகம்' என்று நடைமுறையில் இருக்கின்ற ஒரு திட்டத்தை அந்த பெயரிலேயே விரிவுபடுத்தாமல் புதிதாக அதற்கு ‘கலைஞர் உணவகம்' என்று பெயர் வைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். காலப்போக்கில், அம்மா உணவகம் என்ற திட்டத்தையே கலைஞர் உணவகம் என்று மாற்றுவதற்கான ஒரு முயற்சியாக அமைச்சரின் பேச்சு அமைந்திருக்கிறது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று சில மாதங்களே ஆகியுள்ள நிலையில், புதிதாக திட்டங்களை தீட்டுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே புதிதாக தீட்டப்படும் இதுபோன்ற திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பதில் அ.தி.மு.க.வுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை.

அதே சமயத்தில் நடைமுறையில் இருக்கின்ற ஒரு திட்டத்தை இரு பெயர்களில் செயல்படுத்துவது என்பது இதுவரை நடைமுறையில் இல்லாத வினோதமான ஒன்று. இது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. ஏழை-எளிய மக்களுக்காக குறைந்த விலையில் உணவகங்களை அமைப்பது என்பது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிந்தனையில் உதித்த ஓர் அற்புதமான திட்டம். எனவே, இந்த திட்டம் ‘அம்மா உணவகம்' என்ற பெயரிலேயே தொடர்ந்து செயல்படவேண்டும் என்பதுதான் பொதுமக்களின் விருப்பம் ஆகும். எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, பொதுமக்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில், புதிதாக எத்தனை உணவகங்கள் அமைக்கப்பட்டாலும், அவை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ‘அம்மா உணவகம்' என்ற பெயரிலே தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அ.தி.மு.க.வின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story