வேளாண்மை, உற்பத்தி, சேவைத்துறைகள் உள்பட அனைத்து துறையிலும் தொழில்நுட்பத்தின் பங்கு அதிகம் இருக்க வேண்டும்


வேளாண்மை, உற்பத்தி, சேவைத்துறைகள் உள்பட அனைத்து துறையிலும் தொழில்நுட்பத்தின் பங்கு அதிகம் இருக்க வேண்டும்
x
தினத்தந்தி 26 Nov 2021 10:56 PM GMT (Updated: 26 Nov 2021 10:56 PM GMT)

வேளாண்மை, உற்பத்தி, சேவை துறைகள் உள்பட அனைத்து துறையிலும் தொழில்நுட்பத்தின் பங்கு அதிகம் இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில், தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்திற்கான சர்வதேச கருத்தரங்கு (கனெக்ட்-2021) மாநாடு நேற்று தொடங்கியது. மத்திய தகவல் தொழில்நுட்பத் துறையும், தமிழக அரசின் எல்காட் நிறுவனமும், இந்தியத் தொழில் கூட்டமைப்பும் (சி.ஐ.ஐ.) இணைந்து நடத்தும் தகவல் தொழில்நுட்ப 2 நாள் மாநாட்டையும், கண்காட்சியையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது:-

இன்றைய உலகத்தையே ஆட்சி செய்வது ஓரெழுத்து மந்திரம்தான் ‘இ’ என்பதாகும். இண்டர்நெட் இல்லாமல் யாரும் வாழ முடியாது. தொழில்நுட்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டோம். எந்த துறையாக இருந்தாலும் அது தகவல் தொழில்நுட்ப துறையை சார்ந்தே இயங்க வேண்டும். உலகின் பல்வேறு நாடுகளைச் சார்ந்த நிறுவனங்கள் இங்குள்ள 2 நாள் கண்காட்சியில் பங்கேற்கின்றன.

வேலைவாய்ப்பு

1996-ம் ஆண்டு ஆட்சியின்போது தகவல் தொழில்நுட்ப புரட்சியைச் செய்தவர் அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி. அதற்கான சாட்சிதான், 24 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.340 கோடி மதிப்பீட்டில் தரமணியில் கட்டப்பட்ட டைடல் பார்க் ஆகும். 1996-ம் ஆண்டிற்கு முன்பு தமிழ்நாட்டில் இருந்த மென்பொருள் நிறுவனங்களின் எண்ணிக்கை 34. அடுத்ததாக அமைந்த தி.மு.க. அரசின் 5 ஆண்டு காலத்தில் அதன் எண்ணிக்கை 666 ஆக உயர்ந்தது.

தகவல் தொழில்நுட்பம்தான் இன்று காலத்தைச் சுழல வைத்துக்கொண்டு இருக்கிறது. கணினி அறிவியலும், தகவல் தொழில்நுட்பமும் இல்லாமல் எதுவும் இல்லை. இதுதான் ஒரு மாநிலத்துக்கு மிகப்பெரிய முன்னேற்றங்களையும் முதலீடுகளையும் கொண்டு வருவதில் முன்னிலையில் உள்ளது. தேவையையும், தொலைநோக்குப் பார்வையையும், வளர்ச்சியையும், வேலை வாய்ப்பையும் அதிகரிப்பதாக இந்த மாநாடு அமைய வேண்டும்.

முழுமையான அடித்தளம்

தமிழ்நாட்டில் உள்ள மனித வளத்தை, அறிவு சக்தியாக பயன்படுத்திக்கொள்ளத்தக்க உங்களது நிறுவனங்களை வடிவமைக்க வேண்டும். படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள் என்பதோடு நிற்காமல், அறிவாளிகளும் திறமைசாலிகளுமே இதற்குத் தேவை. அத்தகைய திறமைசாலியான, கூர்மையான அறிவுத்திறன் படைத்த இளைஞர்களாகத் தமிழ்நாட்டு இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு கூடுதலான திறன் பயிற்சிகள் கொடுத்து அவர்களை உங்கள் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவிலேயே முன்னிலை பெற்ற மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.

முதல் இடம்

நாட்டிலேயே மின்னணு பொருட்கள் ஏற்றுமதி செய்யும் முக்கிய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இந்தியாவின் மொத்த எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் 16 சதவீதம் தமிழ்நாட்டைச் சார்ந்தது. கணினி, மின்னணுவியல் மற்றும் ஆப்டிகல் தயாரிப்புகள் தயாரிப்பில் இந்தியாவில் 2-வது இடத்தில் இருக்கிறோம். எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் இந்தியாவில் 3-வது இடத்தில் இருக்கிறோம்.

உற்பத்தித் திறனின் வலுவான முதுகெலும்பில் தமிழ்நாடு இந்தியாவின் மின்னணு உற்பத்தி சேவை மையமாகவும் உருவெடுத்திருக்கிறது. தரவு மையங்களை அமைப்பதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.

தொழில்நுட்பத்தின் பங்கு

தகவல் தொழில்நுட்பத் துறைகளில் வளர்ந்து வரக்கூடிய தொழில்நுட்பங்களைத் தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும். தொழில்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் தமிழ்நாடு அரசு வழங்கும் என்பது உறுதி. வேளாண்மை, உற்பத்தி, சேவைத் துறைகள் என, ஒவ்வொரு துறையிலும் தொழில்நுட்பத்தின் தேவைகள், தொழில்நுட்பத்தின் பங்கு ஆகியவை அதிகம் இருக்கும், இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு விரும்புகிறது.

எங்களின் புதிய கொள்கைகள் மற்றும் முன் முயற்சிகள் தமிழ்நாட்டை சர்வதேச தகவல் தொழில்நுட்ப மையமாக மாற்றும் என்று நம்புகிறேன். மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு தடையாக உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதில் தொழில்துறையுடன் இணைந்து செயல்படுவோம். தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையானது நமது லட்சியமான 1 லட்சம் கோடி டாலர் இலக்கை அடைய உதவும்.

இவ்வாறு அவர் பேசி னார்.

தரவு மைய கொள்கை வெளியீடு

இம்மாநாட்டில், தமிழ்நாடு தரவு மையத்தில் முதலீடுகளை செயல்படுத்துவதற்கான கொள்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு, கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற தொழில்நுட்பத் திறன் போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பரிசுத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார். சிறந்த தொழில் நிறுவனங்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட விருதுகளையும் வழங்கினார்.

நிதித்துறை முதன்மைச் செயலாளர் என்.முருகானந்தத்திற்கு ஹக்கத்தான் விருது வழங்கப்பட்டது. தரவுகளை அடிப்படையாகக் கொண்ட கொள்கை வடிவமைத்தலில், மாநிலத்தின் திறனை மேம்படுத்துவதற்காக, சென்னை கணிதவியல் கழகத்துடன் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, முதல்-அமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டன.

பங்கேற்றோர்

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், முதன்மைச்செயலாளர் நீரஜ் மிட்டல், எல்காட் மேலாண்மை இயக்குனர் அஜய் யாதவ்,

இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்கா இயக்குனர் சஞ்சய் தியாகி, ‘சைன்ட்’ துணைத் தலைவர் மோகன் ரெட்டி, கனெக்ட் மாநாட்டுத் தலைவர் ஜோஷ் போல்கர், சி.ஐ.ஐ.யின் தமிழகத் தலைவர் சந்திரகுமார் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Next Story