அறநிலையத்துறை கல்லூரி உதவிப்பேராசிரியர் தேர்வை எதிர்த்த வழக்கு தள்ளுபடி


அறநிலையத்துறை கல்லூரி உதவிப்பேராசிரியர் தேர்வை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
x
தினத்தந்தி 26 Nov 2021 11:02 PM GMT (Updated: 26 Nov 2021 11:02 PM GMT)

அறநிலையத்துறை கல்லூரி உதவிப்பேராசிரியர் தேர்வை எதிர்த்த வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

இந்து சமய அறநிலையத்துறை சார்பில், சென்னை கொளத்தூரில் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரியில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் 18-ந்தேதி நேர்முக தேர்வு நடந்தது. இதுதொடர்பான அறிவிப்பு அக்டோபர் 13-ந்தேதி வெளியிடப்பட்டது.

இதை எதிர்த்து திருச்சியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்தார். அதில், “காலியிடங்களை அறிவிக்காமலும், இட ஒதுக்கீடு கொள்கைகளை பின்பற்றாமலும், நேர்முக தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதுவும், இந்துக்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இவை அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்பதால், நேர்முகத் தேர்வு மற்றும் அதன் தொடர்ச்சியாக நியமன நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் டி.ராஜா, டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு பிளீடர் முத்துகுமார், “கடந்த அக்டோபர் 18-ந்தேதி நேர்முகத் தேர்வு முடிந்து, அக்டோபர் 22-ந்தேதி பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டு விட்டது” என்று கூறினார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், காலதாமதமாக வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Next Story