இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது அப்பாவு பேச்சு: கே.எஸ். அழகிரி பாராட்டு


இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது அப்பாவு பேச்சு:  கே.எஸ். அழகிரி பாராட்டு
x
தினத்தந்தி 26 Nov 2021 11:42 PM GMT (Updated: 2021-11-27T05:12:21+05:30)

தமிழக சட்டப்பேரவை தலைவரின் பேச்சு இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது என்று கே.எஸ். அழகிரி பாராட்டு தெரிவித்து உள்ளார்.



சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், இமாச்சல பிரதேசத்தில் நடந்த அகில இந்திய சபாநாயகர்களின் 82வது மாநாட்டில் பங்கேற்று மாநில உரிமைகள் குறித்த வலுவான தமிழகத்தின் குரலை தமிழக சபாநாயகர் அப்பாவு ஒலித்திருக்கிறார்.

அவரது குரல் இந்தியாவில் பல மாநிலங்களில் ஆளும் பா.ஜ.க. அல்லாத அரசுகளின் குரலாக ஒலித்திருக்கிறது. சபாநாயகர்களின் அதிகாரம் குறித்தும் அதில் மத்திய அரசு, நீதிமன்றங்களின் தலையீட்டினால் ஏற்படும் இடையூறுகள் குறித்தும் தனது கருத்துகளை பதிவு செய்திருக்கிறார்.

ஒரு மாநிலத்தின் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்துவது, அந்த மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தக்கூடிய செயல் என தோலுரித்து காட்டியிருக்கிறார். மக்களின் விருப்பத்தை வெளிப்படுத்தும் மசோதாக்களை கிடப்பில் போடுவதோ, திருப்பி அனுப்புவதோ, அந்த மாநில மக்களின் விருப்பத்துக்கு எதிரானது என்பதை கோடிட்டு காட்டியுள்ள சபாநாயகர் அப்பாவு, குறிப்பிட்ட மசோதா ஏன் நிராகரிக்கப்பட்டது என்ற காரணத்தையாவது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்திருக்கும் அவரது தைரியமான பேச்சு உண்மையிலேயே வரவேற்புக்கும் பாராட்டுதலுக்கும் உரியது என்று கூறியுள்ளார்.


Next Story