வீடு, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு கிரையப்பத்திரம் வழங்க மாதந்தோறும் சிறப்பு முகாம்கள் அமைச்சர் அறிவிப்பு


வீடு, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு கிரையப்பத்திரம் வழங்க மாதந்தோறும் சிறப்பு முகாம்கள் அமைச்சர் அறிவிப்பு
x
தினத்தந்தி 26 Nov 2021 11:55 PM GMT (Updated: 26 Nov 2021 11:55 PM GMT)

வீடு, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு கிரையப்பத்திரம் வழங்குவதற்கு மாதந்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பரசன் அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் வாரியப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் அன்பரசன் பேசியதாவது:-

நடப்பாண்டில் குடியிருப்புவாசிகளுக்கு 25 ஆயிரம் கிரையப்பத்திரங்கள் வழங்கப்படவேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கை அடைய ஏதுவாகவும், ஏழை-எளிய மக்கள் கிரையப்பத்திரங்களை எளிதில் பெறும் வகையிலும் வாரிய திட்டப்பகுதிகளிலேயே மாதம் ஒருமுறை சிறப்பு முகாம்கள் நடத்தி, கிரையப்பத்திரங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த ஆட்சிக்காலத்தில் பயனாளிகளையே தேர்ந்தெடுக்காமல் கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்புகளுக்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் தகுதியான பயனாளிகளை உடனடியாக தேர்வு செய்து அவர்களுக்கு வீடுகள் ஒதுக்க உரிய அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்ஜெட்டில் அறிவித்துள்ளவாறு 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட குடியிருப்புகளில் ரூ.70 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்புப் பணிகளை மழைக்காலம் முடிந்தவுடன் துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

தரக் கட்டுப்பாடு

சிதிலமடைந்த குடியிருப்புகளை அகற்றி, மறுகட்டுமான திட்டத்தின்கீழ் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 7 ஆயிரத்து 500 குடியிருப்புகள் நடப்பாண்டில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய கட்டுமான திட்டங்களுக்கான பணிகளை விரைவாக தொடங்கி ஏழை, எளிய மக்களுக்கு வீடுகளை வழங்க வேண்டும். வாரியத்தால் கட்டப்படும் புதிய குடியிருப்புகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள 3-ம் தரப்பு தரக்கட்டுப்பாடு நிறுவனங்களாக அரசு பொறியியல் பல்கலைக்கழகங்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது இந்த நிறுவனங்களை கொண்டு 18 திட்டப்பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வருங்காலங்களில் அனைத்து புதிய திட்டப்பகுதிகளுக்கும் இந்த ஆய்வு விரிவுபடுத்தப்படும்.

தொழில்திறன் பயிற்சிகள்

மழைக்காலங்களில் வாரிய திட்டப்பகுதிகளில் மழைநீர் தேங்காமலும், தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் வெளியேற்றவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த குடியிருப்புகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, சமுதாய வளர்ச்சி பிரிவின் மூலம் தொழில்திறன் பயிற்சிகள், தொழில் தொடங்க நிதிஉதவிகள் அனைவருக்கும் கிடைக்க செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் ஹித்தேஷ்குமார் எஸ்.மக்வானா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் ம.கோவிந்தராவ், இணை மேலாண்மை இயக்குனர் வ.சிவகிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story