சென்னையில் கொட்டும் மழையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு: தேங்கிய மழைநீரை விரைவில் வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு


சென்னையில் கொட்டும் மழையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு: தேங்கிய மழைநீரை விரைவில் வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு
x
தினத்தந்தி 27 Nov 2021 12:13 AM GMT (Updated: 27 Nov 2021 12:13 AM GMT)

சென்னையில் கொட்டும் மழையில் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், சாலைகளில் தேங்கிய மழைநீரை விரைவில் வெளியேற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சென்னை,

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 7-ந் தேதி முதல் தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை புளியந்தோப்பு பகுதியில் மழையால் சேதமடைந்த மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகளையும், திரு.வி.க. நகர், 73-வது வார்டு, ஸ்டீபன்சன் சாலையில் பாலப் பணிகளையும் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்து இப்பணிகளை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாவண்ணம் துரிதமாக முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, சிவ இளங்கோ சாலை மற்றும் பெரவள்ளூர் போலீஸ் நிலையம் எதிரில் உள்ள பகுதிகளிலும், அசோகா அவின்யூ பகுதிகளிலும் தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் பம்ப் மூலம் வெளியேற்றும் பணிகளை முதல்-அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

குளம் சீரமைப்பு பணி

பின்னர் அவர், கொளத்தூர், ஜி.கே.எம். காலனியில் உள்ள குளத்தை சீரமைக்கும் பணியையும், கந்தசாமி சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதையும் பார்வையிட்டு மழைநீரை துரிதமாக வெளியேற்றவும் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர் பாபு, தயாநிதி மாறன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, இ.பரந்தாமன், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்த போது கனமழை கொட்டியது. குடையுடன் அவர், பணிகளை பார்வையிட்டார்.

Next Story