சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 12 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை


சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 12 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
x
தினத்தந்தி 27 Nov 2021 12:34 AM GMT (Updated: 27 Nov 2021 12:34 AM GMT)

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்பட 12 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்துவருகிறது.

தெற்கு வங்கக் கடலில்நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நேற்று விடிய விடிய மழை பெய்தது.

மிக கனமழை

இந்தநிலையில் இன்று (சனிக்கிழமை) சென்னையில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று முன்தினம்) அதி கனமழை 3 இடங்களிலும், கன முதல் மிக கனமழை 4 இடங்களிலும், 70 இடங்களில் கனமழையும் பெய்திருக்கிறது.

குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 27-ந் தேதி (இன்று) சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

கனமழை

28-ந் தேதி (நாளை) சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், அரியலூர், திருச்சி, கரூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

29-ந் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். 30-ந் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சிவப்பு எச்சரிக்கை

சென்னையைப் பொறுத்தவரை இன்று ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே பெய்த மழை, வரும் நாட்களில் பதிவாக உள்ள மழை மற்றும் பாதிப்புகளை கருத்தில்கொண்டு, கடலோர மாவட்டங்களுக்கு அடுத்து வர உள்ள 2 நாட்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் (ரெட் அலர்ட்), அதை ஒட்டி யுள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்படுகிறது.

இதன்படி சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அதி கனமழை ( ரெட் அலர்ட்) அதாவது 20 செ.மீ வரை அல்லது அதற்கு மேல் மழை பெய்யும்.

குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே இந்த பகுதிகளுக்கு 27-ந் தேதி மீனவர்கள் செல்லவேண்டாம்.

காற்றழுத்த தாழ்வு பகுதி

29-ந் தேதி தெற்கு அந்தமான் கடல்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதன் காரணமாக அந்தமான் கடல்பகுதிகளில் சூறவாளிக்காற்று 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். இதனால் 29-ந் தேதி, 30-ந் தேதிகளில் அந்தமான் கடல்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று மீனவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காயல்பட்டினத்தில் 31 செ.மீ. மழை

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 31 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக தூத்துக்குடியில் 27, திருச்செந்தூரில் 25, நாகப்பட்டினத்தில்19, ஸ்ரீவைகுண்டத்தில்18, குலசேகரப்பட்டினத்தில் 16, வைப்பாரில் 15, காரைக்கால், திருவையாறு, சாத்தான்குளம், ஒட்டபத்திரம், பெலாந்துறையில் தலா 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இதேபோல திருப்புவனம், ஸ்ரீமுஷ்ணம், சாத்தூர், பேராவூரணி, லப்பைக்குடிக்காடு, பாளையங்கோட்டையில் தலா 11 செ.மீ., திண்டுக்கல், திருவாரூர், பூடலூர், அகரம், சீகூர், வெம்பக்கோட்டை, சிவகங்கையில் தலா 10 செ.மீ., தாம்பரம், மணிமுத்தாறு, நன்னிலம், கே.வி.கே.காட்டுக்குப்பம், செம்பரம்பாக்கம், கடம்பூர், மணியாச்சி, சேரன்மகாதேவியில் தலா 9 செ.மீ. மழை பெய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் கனமழை

சென்னை நகர பகுதி மற்றும் புறநகர் பகுதியில் நேற்று ஆங்காங்கே பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியது.

சாலைகளிலும் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்தும் சில இடங்களில் பாதிக்கப்பட்டது.

படகு மூலம் மீட்பு

சென்னையை அடுத்தபள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரிக்கு மேடவாக்கம் அணை ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டதால் பள்ளிக்கரணை செட்டிநாடு குடியிருப்பு பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகளை இடுப்பளவு தண்ணீர் தேங்கியது. இதனால் அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட செல்ல முடியவில்லை. தண்ணீர் வடிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை படகு வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தண்ணீரில் மக்கள் அவதிப்படும் தகவல் அறிந்ததும் பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் அருண் பாலகோபாலன், மடிப்பாக்கம் உதவி கமிஷனர் பிராங்க் டி ரூபன், பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் விரைந்து சென்று பார்வையிட்டனர். மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்கிடவும் 2 படகுகள் மூலம் மக்களை மீட்கவும் நடவடிக்கை எடுத்தனர். இடுப்பளவு தண்ணீர் செல்லுவதால் அப்பகுதியில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. தண்ணீர் வடிய உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் துணை கமிஷனர் அருண் பாலகோபாலன் தெரிவித்தார்.
16 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர்மழை காரணமாக இன்று (சனிக்கிழமை) 16 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. அந்த மாவட்டங்கள் விவரம் வருமாறு:-

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தூத்துக்குடி, நெல்லை, திருவாரூர், புதுக்கோட்டை,நாகை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருச்சி, ராமநாதபுரம், கடலூர், விழுப்புரம்.

Next Story