ஒகேனக்கலில் நீர்வரத்து சரிவு; குளிக்கவும், பரிசல் இயக்கவும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி


ஒகேனக்கலில் நீர்வரத்து சரிவு; குளிக்கவும், பரிசல் இயக்கவும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
x
தினத்தந்தி 27 Nov 2021 4:46 AM GMT (Updated: 27 Nov 2021 4:46 AM GMT)

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததையடுத்து அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக காவிரி ஆறு கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்குள் நுழைகிறது. ஒகேனக்கல்லில் ஐந்தருவி, சினி அருவி, மெயின் அருவி ஆகியவை உள்ளன. இங்கு தண்ணீர் பாய்ந்தோடும் காலங்களில் பரிசல்களில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்வார்கள். மேலும் முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்டவற்றைக் காண, சீசன் காலங்களில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பென்னாகரம், ஒகேனக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது. நீர்வரத்து உயர்வால் முன்னெச்சரிக்கை அங்கு அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டது. 

இந்த நிலையில் காவிரி சுற்றுவட்டார பகுதிகளில் மழை குறைந்ததன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீர்வரத்து 74 ஆயிரம் கன அடியில் இருந்து 18 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் சுற்றுலா பயணிகளுக்கு தற்போது மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. 

அதே சமயம் காட்டாற்று வெள்ளத்தில் பல்வேறு மரங்கள், கிளைகள், பாறைகள் உள்ளிட்டவை நீரில் அடித்து வரப்பட்டது. இவற்றை அகற்றும் பணி மாவட்ட நிர்வாகத்திற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. இதனை சீரமைக்கும் பணி விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story