இடுப்பளவு தண்ணீரில் மூதாட்டியின் உடலை சுமந்து சென்ற உறவினர்கள்


இடுப்பளவு தண்ணீரில் மூதாட்டியின் உடலை சுமந்து சென்ற உறவினர்கள்
x
தினத்தந்தி 27 Nov 2021 6:30 PM GMT (Updated: 27 Nov 2021 6:30 PM GMT)

மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் இடுப்பளவு தண்ணீரில் மூதாட்டியின் உடலை உறவினர்கள் சுமந்து சென்றனர்.

தோகைமலை, 
தோகைமலை ஒன்றியம் கல்லடை ஊராட்சி கரையாம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் அரியநாச்சி (வயது 80). இவர், வயது முதிர்வு காரணமாக நேற்று உயிரிழந்தார். இதையடுத்து, மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மயானத்திற்கு சாலை வசதி இல்லாததால் அவரது உறவினர்கள் ஆற்றுவாரியில் இடுப்பளவு தண்ணீரில் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மயானத்திற்கு செல்ல சாலை வசதி கேட்டு கடந்த 20 ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஆனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் இறந்தவர்களின் உடலை ஆற்றுவாரியை கடந்து பல்வேறு சிரமங்களுக்கு இடையே கொண்டு சென்று வருகிறோம். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு ஆற்றுவாரியை அகலப்படுத்தி பாலம் அமைப்பதுடன் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Next Story