தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை; அமைச்சர் பேட்டி


தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை; அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 28 Nov 2021 12:05 AM GMT (Updated: 28 Nov 2021 12:05 AM GMT)

ஒமிக்ரான் தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என தமிழக அமைச்சர் பேட்டியில் தெரிவித்து உள்ளார்.


சென்னை,

இங்கிலாந்து, இஸ்ரேல் உள்பட 5 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு, தமிழகத்தில் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது, என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அமைச்சர் சுப்பிரமணியன், செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.  இதன்பின், அமைச்சர் அளித்த பேட்டியில், தென்ஆப்ரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங், இஸ்ரேல், பெல்ஜியம் நாடுகளில், 88 பேருக்கு உருமாறிய ஒமிக்ரான் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

இந்த வைரஸ் மற்ற நாடுகளுக்கு பரவாத வகையில், பல்வேறு நாடுகள் தற்காப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.  சென்னை விமான நிலையத்தில், வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே வெப்ப பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதுபோன்ற பணிகளை கண்காணிக்கும் வகையில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி சர்வதேச விமான நிலையங்களில், தமிழக மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், தலா ஒரு உதவி திட்ட மேலாளர் நியமிக்கப்படுகிறார்.  இவர், அனைத்து பயணியருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறதா என்று கண்காணிப்பார்.

அதிலும், தென்ஆப்ரிக்கா நாட்டில் இருந்து வேறு நாடு வழியாக தமிழகம் வருவர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்தும் பணியை மேற்கொள்வார்.  சென்னை விமான நிலையத்தை பொறுத்தவரை, தென்ஆப்ரிக்கா, சீனா, நியூசிலாந்து, ஹாங்காங், இஸ்ரேல், பிரேசில் போன்ற நாடுகளில் இருந்து வருவோர், கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவர்.

எட்டு நாட்கள் தனிமைக்கு பின், கொரோனா பரிசோதனை செய்து, தொற்று பாதிப்பு இல்லை என்றால் மட்டுமே, வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவர்.  தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் குறித்த அச்சம் தேவையில்லை. அதேவேளையில், பாதுகாப்புடன் இருப்பது அவசியம் என்று கூறியுள்ளார். 


Next Story