மாநில செய்திகள்

12 கடலோர மாவட்டங்களுக்கு இன்றும் ‘ரெட் அலர்ட்' + "||" + Red Alert for 12 coastal districts today

12 கடலோர மாவட்டங்களுக்கு இன்றும் ‘ரெட் அலர்ட்'

12 கடலோர மாவட்டங்களுக்கு இன்றும் ‘ரெட் அலர்ட்'
குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 12 வட கடலோர மாவட்டங்களுக்கு இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) ‘ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வெளுத்து வாங்கும் மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்பட சில மாவட்டங்களில் கன முதல் அதி கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து இருக்கிறது.

பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து வெளுத்து வாங்கி வரும் மழையால் அனைத்து பகுதிகளிலும் இயல்பை விட அதிகமாகவே மழை பதிவாகி இருக்கிறது. அந்தவகையில் விழுப்புரம், திருப்பத்தூர், பெரம்பலூர், கன்னியாகுமரி, கோவை ஆகிய இடங்களில் இயல்பை விட 100 சதவீதத்துக்கு அதிகமாக மழை பெய்து இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரெட் அலர்ட்

கடந்த 2 தினங்களை பொறுத்தவரையில் கடலோர மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. இதனால் அந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது.

அதன் தொடர்ச்சியாக குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) மழை நீடிக்கும் என்பதால் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய 12 வட கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தொடரும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிக கனமழை பெய்யும் இடங்கள்

அதன்படி இன்று வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், அரியலூர், பெரம்பலூர், சேலம், தர்மபுரி, திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை (திங்கட்கிழமை) கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

அனேக இடங்களில் மிதமான மழை

நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் அனேக இடங்களில் மிதமான மழையும்,

அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந் தேதி (புதன்கிழமை) நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஆவடியில் 20 செ.மீ. மழைப்பதிவு

குமரி கடல் மற்றும் தென் மேற்கு வங்க கடல், தென் தமிழக கடலோர பகுதிகளில் இன்றும், அந்தமான் கடல்பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மேற்சொன்ன நாட்களில் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கின்றனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ஆவடி 20 செ.மீ., மாமல்லபுரம், செங்கல்பட்டு, செய்யூர் தலா 18 செ.மீ., கட்டப்பாக்கம் 17 செ.மீ., திருக்கழுக்குன்றம் 16 செ.மீ., மதுராந்தகம், சோழவரம், பரங்கிப்பேட்டை தலா 15 செ.மீ., திருவள்ளூர் 13 செ.மீ., காஞ்சீபுரம், செம்பரம்பாக்கம், பொன்னேரி, தாம்பரம், அம்பத்தூர் தலா 12 செ.மீ., சிதம்பரம், கொரட்டூர், திருப்போரூர், செங்குன்றம் தலா 11 செ.மீ., கேளம்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர், பெரம்பூர், அண்ணா பல்கலைக்கழகம், தாமரைப்பாக்கம், சென்னை நுங்கம்பாக்கம் தலா 10 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்து இருக்கிறது.

இயல்பை விட மழை அதிகம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தற்போது வரை 34 செ.மீ. மழை பதிவாகி இருக்கவேண்டும். ஆனால் இயல்பை விட 74 சதவீதம் அதிகமாக 60 செ.மீ. என்ற அளவில் மழை பதிவாகி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

அந்தமானில் உருவாகும் தாழ்வு பகுதியால் மழை இருக்குமா?
தற்போது குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகிறது என்றும், அதற்கடுத்த 48 மணி நேரத்தில் (வருகிற 1-ந் தேதி) மேற்கு-வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து, தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும் என்றும் ஆய்வு மையம் கணித்து இருக்கிறது.

இந்த தாழ்வு பகுதியால் தமிழகத்துக்கு தொடர்ந்து மழை இருக்குமா? என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசனிடம் கேட்டபோது, ‘அந்தமானில் உருவாகும் தாழ்வு பகுதி, வலுப்பெற வாய்ப்பு இருப்பதால், தமிழகத்துக்கு தற்போது வரை வாய்ப்பு இல்லை. ஆனால் அது வலுப்பெறாமல் கீழ் நோக்கி நகரும் பட்சத்தில் தமிழகத்துக்கு மீண்டும் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது' என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு- காஷ்மீரில் மிக கனமழை, பனிப்பொழிவிற்கான ‘ரெட் அலர்ட்’
ஜம்மு-காஷ்மீரில் மிக கனமழை மற்றும் பனிப்பொழிவிற்கான ரெட் அலர்ட்டை வானிலை ஆய்வாளர் இன்று அறிவித்தார்.
2. தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்” ...?
தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
3. அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்- கன மழை எச்சரிக்கையால் சென்னை மாநகராட்சி வேண்டுகோள்
சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
4. கேரளாவில் கனமழை: 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
கனமழை காரணமாக மாநிலத்தின் தெற்கு பகுதியில் பல்வேறு சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
5. சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை வாபஸ்..!
காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே நேற்று மாலை பலத்த காற்றுடன் கரையை கடந்தது.