மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு


மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
x
தினத்தந்தி 28 Nov 2021 6:24 AM GMT (Updated: 28 Nov 2021 6:24 AM GMT)

பூந்தமல்லி, திருவேற்காட்டில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாதிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய மழை பெய்தது. தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்ததுடன் சாலைகளிலும் தண்ணீர் ஆறுபோல ஓடியது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டது.

இந்தநிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் வெள்ளநீரில் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் உடன் சென்று வெள்ள பாதிப்பு பகுதிகள் பற்றி விளக்கி கூறினார். 

இதனைத்தொடர்ந்து மழையால் பாதிப்படைந்து அங்குள்ள ஒன்றிய மேல்நிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டு இருந்த பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார். பொது மக்கள் சொன்ன குறைகளை கேட்டறிந்தார். அதன் பிறகு ஆவடி பகுதிக்கு சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். 

பின்னர் அங்கிருந்து பூந்தமல்லி அம்மன் கோவில் தெரு, எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டார். அங்கு தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முதல்-அமைச்சருடன் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் உடன் சென்றிருந்தனர்.

ஆவடி, திருவேற்காடு, திருமுல்லைவாயல், அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் வெள்ள நீர் தேங்காமல் இருப்பதற்கு நிரந்தர தீர்வு காணவும் விரிவான திட்டம் வகுக்கவும் அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். தொடர்ந்து தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்ற துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

Next Story