மக்களை காப்பாற்றிட உழைத்திடுமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன் - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்


மக்களை காப்பாற்றிட உழைத்திடுமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன் - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
x
தினத்தந்தி 28 Nov 2021 2:42 PM GMT (Updated: 28 Nov 2021 2:42 PM GMT)

இப்பெருமழையிலும் மக்களை இன்னலின்றிக் காப்பாற்றிட உழைத்திடுமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன் என தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகொள் விடுத்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. மழை வெள்ள பாதிப்புகளை முதல்-அமைச்சர் மு,க ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி வரும் அவர், நிவாரணப் பொருட்களையும் வழங்கி வருகிறார். முன்னதாக ,அடுத்த சில நாட்களும் மிக அதிக மழை தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் அனைவரும் நேரம் காலம் பார்க்காது களத்திலேயே இருந்து பணியினை தொடர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.. உங்களுடன் முதலமைச்சராக நானும் களத்தில் நிற்கிறேன்.. நிற்பேன்.. என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது, தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், "இந்த இடர்மிகு சூழலில், மழை வெள்ள நிவாரணப் பணிகளில் தொண்டர்கள் அனைவரும் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வரும் செய்திகள் எனக்கு வந்து கொண்டிருப்பது மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது.

மழை தொடர்ந்து கொண்டிருப்பதால் முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் அடித்தட்டு மக்களுக்கு உணவு கிடைப்பதில் எவ்வித சிரமங்களும் நேராமல் இருக்க, அமைச்சர்கள், தொண்டர்கள், பிரதிநிதிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் ஏழை எளிய மக்களின் உணவு மற்றும் உடைமைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் முன்னணியில் நின்று செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

வரலாறு காணாத பெருமழைக் காலத்திலும், கடைக்கோடியில் உள்ள ஒருவர் கூட உணவுக்குச் சிரமப்படவில்லை என்று வரும் செய்தி தான், நம் கழகச் செயல்வீரர்கள் மக்களுக்கு ஆற்றியுள்ள மனிதநேயக் கடமைக்கான அங்கீகாரம் ஆகும். எனக்கு மகிழ்ச்சியளிப்பதும் அதுதான். ஆகவே, கட்சியினர் அனைவரும் அதிகாரிகளுடன் இணைந்து நின்று பணியாற்றி, மக்களை இன்னலின்றிக் காப்பாற்றிட உழைத்திடுமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Next Story