இனி சனிக்கிழமை தோறும் கொரொனா மெகா தடுப்பூசி முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


இனி சனிக்கிழமை தோறும் கொரொனா மெகா தடுப்பூசி முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 28 Nov 2021 4:09 PM GMT (Updated: 28 Nov 2021 4:09 PM GMT)

தமிழகத்தில் இனி சனிக்கிழமை தோறும் கொரொனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

12 ஆவது மெகா தடுப்பூசி முகாம் இன்று நிறைவடைந்துள்ள நிலையில் தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

 "22 மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வரும் நிலையிலும் இன்று  நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 16,05,793 பேர் தடுப்பூசி போட்டு கொண்டனர். 

முதல் தவணை 5,89,140 பேரும், இரண்டாம் தவணை 10,16,153 பேரும் செலுத்திக் கொண்டனர்.  
ஒட்டுமொத்தமாக 78.38 % பேர் முதல் தவணையையும், 43.86% பேர் இரண்டாம் தவணையையும் செலுத்தி முடித்துள்ளனர்.

இன்றுடன் தமிழகத்தில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 7 கோடியை தாண்டியது.

 இனி வாரந்தோறும் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும். தடுப்பூசி செலுத்தாதோரை கண்டறிந்து தேடி தடுப்பூசி செலுத்தப்படும் என மருத்துவத்துறை ஊழியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 

மருத்துவப் பணியாளர்களின் நலன் கருதியே ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தடுப்பூசி முகாம் சனிக்கிழமைக்கு மாற்றப்படுகிறது. சென்னையில் இன்று ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் இதுவரை ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்படவில்லை. மழை காலம் என்பதால் அனைவரும் காய்ச்சி வடிகட்டிய நீரை பருக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story