ரிசர்வ் வங்கி அதிகாரி வீட்டில் 27 பவுன் நகை திருட்டு


ரிசர்வ் வங்கி அதிகாரி வீட்டில் 27 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 28 Nov 2021 6:50 PM GMT (Updated: 28 Nov 2021 6:50 PM GMT)

புழல் அருகே ரிசர்வ் வங்கி அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 27 பவுன் நகை, ரூ.1 லட்சம் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்றுவி்ட்டனர்.

செங்குன்றம்,

சென்னையை அடுத்த புழல் புத்தகரம் வானவர் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 49). இவர், கேரளாவில் உள்ள ரிசர்வ் வங்கியில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். கடந்த 21-ந்தேதி ராஜேந்திரன், வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கேரளாவுக்கு சென்று விட்டார்.

நேற்று காலை வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டை உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள், பொருட்கள் அறையில் சிதறி கிடந்தது.

27 பவுன் நகை திருட்டு

பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் வைத்து இருந்த 27 பவுன் தங்க நகை, ரூ.1 லட்சம் மற்றும் 1 கிலோ மதிப்பிலான வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.

ராஜேந்திரன் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கேரளாவுக்கு சென்றிருப்பதை அறிந்த கொள்ளையர்கள், அவரது வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசையை காட்டி உள்ளனர்.

இதுகுறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின்பேரில் புழல் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ெகாள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்மநபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? எனவும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

மற்ெறாரு சம்பவம்

சென்னையை அடுத்த போரூர் பெரியபணிச்சேரி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். வெல்டரான இவர், வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் அரும்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

அப்போது மர்மநபர்கள், ராஜேஷ் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள், 300 கிராம் வெள்ளி பொருட்களை திருடிச்சென்றுவிட்டனர். அத்துடன், அவரது வீட்டின் வெளியே வைத்திருந்த புதிய காலணிகளை திருடிவிட்டு தாங்கள் அணிந்து வந்த பழைய காலணிகளை போட்டு சென்றுள்ளனர். மேலும், அதே பகுதியில் 3 இருசக்கர வாகனங்களையும் திருடிச் சென்றனர். இது குறித்து மாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story