லாரியில் கடத்திய 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; டிரைவர் கைது


லாரியில் கடத்திய 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; டிரைவர் கைது
x
தினத்தந்தி 28 Nov 2021 6:59 PM GMT (Updated: 28 Nov 2021 6:59 PM GMT)

தோகைமலை அருகே லாரியில் கடத்தி சென்ற 7 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

தோகைமலை, 
ரகசிய தகவல்
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள நல்லூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் உத்தரவின்பேரில் தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் நல்லூர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது நல்லூர்-கலிங்கப்பட்டி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி டிரைவரிடம் விசாரணை செய்தனர். 
7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
இதில், டிரைவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த லாரியில் சோதனை நடத்தினர். அப்போது அந்த லாரியில் 7 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த லாரியுடன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். விசாரணையில் லாரியை ஓட்டி சென்றது நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, குமாரபாளையம் அருகே உள்ள வளையகாரனூரை சேர்ந்த பழனிச்சாமி (வயது 45) என்பது தெரியவந்தது.
டிரைவர் கைது
நல்லூர் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து இடைத்தரகர்கள் அரிசியை வாங்கி கரூரை சேர்ந்த தாமஸ் மூலம் நாமக்கல் மற்றும் கரூர் பகுதியில் உள்ள கோழி, வாத்து பண்ணைகளுக்கு தீவனத்திற்காக அனுப்பி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, லாரி டிரைவர் பழனிச்சாமியை போலீசார் கைது செய்தனர்.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
தோகைமலை அருகே 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story