சென்னை ரெயில் மீது மரம் விழுந்தது என்ஜின் சேதம்; 2 மணி நேரம் தாமதம்


சென்னை ரெயில் மீது மரம் விழுந்தது என்ஜின் சேதம்; 2 மணி நேரம் தாமதம்
x
தினத்தந்தி 28 Nov 2021 10:58 PM GMT (Updated: 28 Nov 2021 10:58 PM GMT)

சென்னை ரெயில் மீது மரம் விழுந்தது என்ஜின் சேதம்; 2 மணி நேரம் தாமதம்.

ராமேசுவரம்,

சென்னையில் இருந்து நேற்று முன்தினம் மாலை ராமேசுவரம் நோக்கி சேது எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. அந்த ரெயில் ராமநாதபுரத்தில் இருந்து நேற்று அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்தது.

ரெயில் ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை-பெருங்குளம் இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது உச்சிப்புளி அருகே தண்டவாளம் பக்கத்தில் இருந்த பெரிய புளியமரம் பலத்த காற்றில் முறிந்து ரெயில் என்ஜின் மீது விழுந்தது.

உடனே என்ஜின் டிரைவர் சாமர்த்தியமாக வேகத்தை குறைத்து ரெயிலை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரெயிலில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். என்ஜினின் ஒரு பகுதி மட்டும் சேதம் அடைந்தது.

2 மணி நேர தாமதத்திற்கு பின்னர் மாற்று என்ஜின் மூலமாக ரெயில் ராமேசுவரம் சென்றது.

Next Story