சேலத்தில் அம்மா மினி கிளினிக் என்ற பெயர் பலகையை மாற்றுவதா? ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்


சேலத்தில் அம்மா மினி கிளினிக் என்ற பெயர் பலகையை மாற்றுவதா? ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
x
தினத்தந்தி 28 Nov 2021 11:02 PM GMT (Updated: 28 Nov 2021 11:02 PM GMT)

சேலத்தில் அம்மா மினி கிளினிக் என்ற பெயர் பலகையை மாற்றம் செய்ததற்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மாற்றத்தை தருவோம் என்று கூறிவிட்டு, தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிவுகள் வெளிவந்த 2-வது நாளே முகப்பேர் பகுதியில் உள்ள அம்மா உணவகம் சூறையாடப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் திடீரென்று மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் மற்றும் தி.மு.க. தலைவரின் படத்தை ஒட்டினர்.

அந்த வரிசையில் தற்போது சேலம் மாவட்டம் நவப்பட்டி ஊராட்சி பொது சேவை மையத்தில் இயங்கும் அம்மா மினி கிளினிக் என்ற பெயர் பலகையை எடுத்துவிட்டு, முதல்-அமைச்சரின் மினி கிளினிக் என்ற பெயர் பலகை வைத்ததோடு, அதில் தற்போதைய முதல்-அமைச்சர், மறைந்த முதல்-அமைச்சர் உருவப்படங்கள் பொறிக்கப்பட்டது என ஏமாற்றத்தை தந்துகொண்டிருக்கின்ற அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.

தி.மு.க.வினரின் தலையீடு

இதில் இருந்து தி.மு.க.வினரின் கட்டுப்பாட்டில் அரசு அதிகாரிகள் இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. இதன்மூலம் அரசாங்க நடவடிக்கைகளில் தி.மு.க.வினர் தலையிடுகிறார்கள் என்பதும் தெள்ளத்தெளிவாக உறுதி செய்யப்படுகிறது.

பேரறிஞர் அண்ணா வழியில் ஆட்சி நடைபெறுகிறது என்று ஒருபுறம் கூறிவந்தாலும், அவருடைய கொள்கைகளுக்கு முரணான செயல்கள் தான் தி.மு.க. ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பெயர் பலகை மாற்றம் செய்யப்பட்டு 4 நாட்கள் கடந்துள்ள நிலையில், இதுதொடர்பான புகார் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும், உள்ளாட்சித்துறை அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்ட நிலையில் பெயர் பலகையை மாற்றவோ, பெயர் பலகையை மாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ எந்தவித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. அரசாணை இல்லாமல், அந்த துறை தொடர்புடைய அதிகாரிகளின் இசைவு இல்லாமல் எந்த அடிப்படையில் இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டது? என்பதை விளக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு.

நடவடிக்கை எடுக்கவேண்டும்

அரசாங்க அலுவலகத்தில் உள்ள பெயர் பலகைகளை எந்த ஆணையும் இல்லாமல், அதிகாரிகளின் இசைவு இல்லாமல் யார் வேண்டுமானாலும் மாற்றலாம் என்றால், அங்கு சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை என்பதுதான் பொருள். அம்மா மினி கிளினிக் என்ற பெயர் பலகை முதல்-அமைச்சரின் மினி கிளினிக் என்று மாற்றப்பட்டதற்கு யார் காரணம்? இந்த பெயர் பலகை மாற்றத்துக்கான நிதி யாரால் கொடுக்கப்பட்டது? என்பதையெல்லாம் ஆராய்ந்து சட்டத்துக்கு புறம்பாக பெயர் பலகை வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயலலிதா உருவப்படத்துடன் கூடிய அம்மா மினி கிளினிக் என்ற பெயர் பலகை மீண்டும் அங்கு பொருத்தப்பட வேண்டும் என்பதுதான் அந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. எனவே முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு பெயர் பலகை மாற்றியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், மீண்டும் ஜெயலலிதாவின் உருவப்படத்துடன் கூடிய அம்மா மினி கிளினிக் என்ற பெயர் பலகை அங்கே பொருத்தப்படவும் ஆவன செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story