மாநில செய்திகள்

தி.மு.க.வில் சேரச்சொல்லி அ.தி.மு.க. நிர்வாகிகளை மிரட்டுகின்றனர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு + "||" + Joining the DMK O. Panneerselvam, Edappadi Palanisamy accused of intimidating executives

தி.மு.க.வில் சேரச்சொல்லி அ.தி.மு.க. நிர்வாகிகளை மிரட்டுகின்றனர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தி.மு.க.வில் சேரச்சொல்லி அ.தி.மு.க. நிர்வாகிகளை மிரட்டுகின்றனர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
கரூர் மாவட்டத்தில் தி.மு.க.வில் சேரச்சொல்லி அ.தி.மு.க. நிர்வாகிகளை மிரட்டுகின்றனர் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னை,

கரூர் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த 22-10-2021 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்தம் உள்ள 12 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்களில், அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் 8 பேர், தி.மு.க.வை சேர்ந்தவர்கள் 4 பேர் என்ற எண்ணிக்கையில் உள்ளனர்.


இந்தநிலையில், தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் நடைபெற வேண்டும் என்று கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், கடந்த 21-10-2021 அன்று மாவட்ட கலெக்டர் மற்றும் தேர்தல் அதிகாரியிடம் நேரில் சென்று மனு அளித்திருந்தார்.

வாக்களிக்க மிரட்டல்

மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, அ.தி.மு.க.வை சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர்கள் தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி மிரட்டப்பட்டு வந்தனர்.

இந்தநிலையில், தேர்தல் நாளான 22-10-2021 அன்று 4 உறுப்பினர்களை மட்டுமே கொண்ட தி.மு.க. வெற்றிபெற முடியாது என்பதால், தேர்தல் நடத்தும் அதிகாரி ஆளுங்கட்சியினரின் மிரட்டலுக்குப் பயந்து தேர்தலை தள்ளிவைத்துள்ளார். தேர்தல் அதிகாரி ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டார்.

பொய் வழக்கு

அ.தி.மு.க.வை சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர்களும், நிர்வாகிகள் மற்றும் வக்கீல்களும், தேர்தல் நிறுத்தப்பட்டதற்குக் காரணம் கேட்டபோது, காவல் துறை அதிகாரிகளை வைத்து தாக்குதல் நடத்தி அங்கிருந்தவர்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர்.

அதன்பிறகு, தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க.வை சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர்கள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். நீதிபதிகள் தேர்தல் ஆணையத்திற்கும், மாவட்ட கலெக்டருக்கும், தேர்தல் நடத்தும் அதிகாரிக்கும், தேர்தலை நேர்மையாக நடத்தவும், தேர்தலை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்டனர்.

தி.மு.க.வில் சேர்ந்தனர்

இந்தநிலையில், தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று தெரிந்துகொண்ட மாவட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் தூண்டுதலின் பேரில், அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளை வைத்து, அ.தி.மு.க.வை சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர்களை மிரட்டியும், அச்சுறுத்தியும் வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, அ.தி.மு.க.வை சேர்ந்த கரூர் மாவட்ட ஊராட்சிக் குழு 2-வது வார்டு உறுப்பினர் எம்.அலமேலுவின் கணவர் மீது, குட்கா வைத்திருந்ததாக ஜாமீனில் வெளியில் வர முடியாத பிரிவுகளில் காவல் துறையினர் 2 பொய் வழக்குகளைப் போட்டுள்ளனர். அலமேலு மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து மிரட்டப்படவே, தங்கள் குடும்பத்தையும், தொழிலையும் காப்பாற்றிக்கொள்ள வேறு வழியின்றி அவர்கள் கடந்த 18-11-2021 அன்று தி.மு.க.வில் சேர்ந்து விட்டனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி மிரட்டல்

அதேபோல், அ.தி.மு.க.வை சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு 10-வது வார்டு உறுப்பினர் நல்லமுத்து வடிவேலுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் சென்று, நிறுவனத்தை சீல் வைப்பதாக மிரட்டியும், ஜாமீனில் வெளியில் வரமுடியாத பிரிவுகளில் வழக்கு தொடுப்பதாகவும் கூறியுள்ளனர். அவர்களின் மிரட்டலுக்கு பயந்து 23-11-2021 அன்று நல்லமுத்து வடிவேலுவும் தி.மு.க.வில் சேர்ந்துவிட்டார்.

இதுபோல், கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து, அ.தி. மு.க.வை சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினர்கள், மாவட்டத்தை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரையும் தி.மு.க.வில் சேருமாறு, மாவட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.

கண்டனம்

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் தி.மு.க.வில் சேரவில்லை என்றால், அவர்கள் மீது ஜாமீனில் வெளியில் வரமுடியாத பிரிவுகளில் பொய் வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், அவர்கள் தொழில் செய்ய முடியாத அளவுக்கு தி.மு.க.வினர், அதிகாரிகளை வைத்து மிரட்டியும் வருகின்றனர்.

நேர்மையாக இருக்க வேண்டிய அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் தி.மு.க. வுக்கு ஆள் சேர்ப்பது வெட்கப்பட வேண்டிய ஒன்று. மேலும், அரசியல் ரீதியாக அ.தி.மு.க.வை சந்திக்க முடியாத தி.மு.க.வை வன்மையாக கண்டிக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் ரூ.500 கோடி முறைகேடு எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் ரூ.500 கோடி முறைகேடு நடந்திருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
2. டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கொரோனா கட்டுக்குள் வரும் வரை டாஸ்மாக் கடைகளை உடனே மூடவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
3. உண்மை சம்பவங்களை விமர்சனம் செய்பவர்கள் மீது பொய் வழக்கு போடுவதா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
உண்மை சம்பவங்களை விமர்சனம் செய்பவர்கள் மீது பொய் வழக்கு போடுவதாக என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
4. லஞ்சம் தர மறுத்தேன்; சீட் மறுப்பு: காங்கிரஸ் பெண் தொண்டர் பரபரப்பு குற்றச்சாட்டு
லஞ்சம் கொடுக்க மறுத்ததற்காக சீட் ஒதுக்கவில்லை என காங்கிரஸ் பெண் தொண்டர் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
5. 'தமிழக மக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துகள்' - எடப்பாடி பழனிசாமி
எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.