ஒமிக்ரான் வைரசை கண்டறியும் வசதி தமிழகத்தில் 12 அரசு ஆய்வகங்களில் அறிமுகம்


ஒமிக்ரான் வைரசை கண்டறியும் வசதி தமிழகத்தில் 12 அரசு ஆய்வகங்களில் அறிமுகம்
x
தினத்தந்தி 29 Nov 2021 8:16 AM GMT (Updated: 29 Nov 2021 8:16 AM GMT)

ஒமிக்ரான் வைரசை கண்டறியும் சோதனை வசதி தமிழகத்தில் உள்ள 12 அரசு ஆய்வகங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை

50 பிறழ்வுகளைக் கொண்டுள்ள கொரோனா வைரசான ‘ஒமிக்ரான்’ தென் ஆப்பிரிக்காவில் தோன்றி உள்ளது.

இந்த வைரஸ், இதுவரை கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ்களில் ஆபத்தானதாக அறியப்படுகிறது. இதனால் உலக நாடுகள் உஷாராக இருக்கின்றன. இருப்பினும் இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் தோன்றி, பெல்ஜியம, இஸ்ரேல், ஹாங்காங்குக்கு பரவி விட்டது.

புதிதாகப் பரவி வரும் வீரிய கொரோனா ரகமான ஒமிக்ரான், ஏற்கெனவே கொரோனா பாதிப்பில் விழுந்து மீண்டவர்களை குறிவைத்து தாக்குகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரான், ஒரே வாரத்தில் உலகின் பெரும்பாலான நாடுகளில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் பரவி வருகிறது. தென்னாப்பிரிக்காவின் மருத்துவ ஆய்வு உறுதியாகும் முன்னரே, அவை பல்வேறு நாடுகளுக்குப் பரவியிருப்பதை இது காட்டுகிறது.

உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸான பி.1.1.529 என்ற ஒமிக்ரான், தமிழகத்தில் பரவாமல் இருக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் இருக்க, 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தமிழக அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், தென்னாப்பிரிக்கா, பிரேசில், வங்கதேசம், சீனா, மொரிசியஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகள், கூடுதல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்த நாடுகளில் இருந்து வருபவர்கள், கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்க வேண்டும். இருந்தாலும், தமிழகம் வந்திறங்கிய பிறகு இவர்களுக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்படும். இதில், தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டாலும் கூட ஏழு நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

எட்டாம் நாள் பரிசோதனை செய்யப்பட்டு அதில் நெகடிவ் ரிசல்ட் வந்தால் மட்டுமே வெளியே செல்லலாம். ஒருவேளை கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானால், பயணியின், மாதிரி சேகரிக்கப்பட்டு மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். அப்போது அவர்கள் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்கள். மரபணு பரிசோதனையில் ஒமிக்ரான் இல்லை என உறுதி செய்யப்பட்டால் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்.

இதற்காக சென்னை, கோவை, மதுரை, திருச்சி என நான்கு சர்வதேச விமான நிலையங்களிலும், ஒரு சுகாதார திட்ட அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளதாக என அரசு அறிவித்துள்ளது. அரசு பட்டியலிட்ட 12 நாடுகளை தவிர பிற நாடுகளில் இருந்து வருபவர்களும் கொரோனா நெகடிவ் சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்றும், ஆனால் இவர்களில் 5 சதவீதம் பேருக்கு மட்டும் விமானநிலையத்தில் கொரோனா சோதனை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒமிக்ரான் கொரோனா உறுதி செய்யப்பட்ட நாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் வரும் பயணிகளுக்கு கோவை விமானநிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, பயணிகளிடம் இருந்து எடுக்கப்படும் சளி மாதிரிகள் உடனுக்குடன் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டு வருவதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே ஒமிக்ரான் வகை கொரோனாவை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், அனைத்து மாவட்ட கலெக்டர்கள், விமான நிலைய இயக்குனர்கள், பொது சுகாதாரத்துறை இயக்குனர், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

இந்நிலையில், ஒமிக்ரான் வைரசை கண்டறியும் சோதனை வசதி தமிழகத்தில் உள்ள 12 அரசு ஆய்வகங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி என 4 நகரங்களில் 12 அரசு ஆய்வகங்களில் இந்த சோதனை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் ஆகிய அரசு ஆய்வகங்களில் தொற்று கண்டறியும் சோதனை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆய்வகங்களில் டேக்பாத் என்ற கிட் மூலம் பரிசோதனை செய்து முடிவுகள் அறிவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்ட பரிசோதனையில் மரபணு மாற்றம் இருப்பது தெரிந்த பிறகு,  மரபணு பகுப்பாய்வு செய்யப்படுகிறது. இதன் முடிவுகள் தெரிய 7 நாட்கள் வரை ஆகும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story