ரூ.2½ லட்சத்துக்கு குழந்தை விற்கப்பட்ட வழக்கு: பெண் புரோக்கர்கள் உள்பட 3 பேர் கைது


ரூ.2½ லட்சத்துக்கு குழந்தை விற்கப்பட்ட வழக்கு: பெண் புரோக்கர்கள் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 29 Nov 2021 6:57 PM GMT (Updated: 29 Nov 2021 6:57 PM GMT)

சென்னையில் பிறந்த 5 நாளில் ரூ.2½ லட்சத்திற்கு விற்கப்பட்ட குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. இதுதொடர்பாக பெண் புரோக்கர்கள் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார், பணம் கொள்ளை போனதாக நாடகமாடிய தாயையும் பிடித்தனர்.

சென்னை,

சென்னை புழல் காவாங்கரை, கே.எஸ்.நகரைச் சேர்ந்தவர் யாஸ்மின். இவருக்கு திருமணமாகி 10 வயது பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் யாஸ்மின் 2-வதாக கர்ப்பம் அடைந்தார். இந்த சூழ்நிலையில் கணவர் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டதாக தெரிகிறது.

ஆஸ்துமாவால் அவதிப்பட்ட யாஸ்மின் புரசைவாக்கத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அங்கு எண்ணூரைச் சேர்ந்த ஜெயகீதா என்ற பெண் அறிமுகமானார். வயிற்றில் வளரும் கருவை அழித்தால்தான் நிம்மதியாக வாழ முடியும் என்று யாஸ்மின், ஜெயகீதாவிடம் கூறியுள்ளார்.

ஆனால் ஜெயகீதா, கருவை அழிக்க வேண்டாம். குழந்தை பிறந்ததும் விற்று விடலாம் என்று கூறியுள்ளார்.

ரூ.2½ லட்சத்துக்கு குழந்தை விற்பனை

இந்தநிலையில் கடந்த 21-ந்தேதி ராயபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அழகான ஆண்குழந்தையை யாஸ்மின் பெற்றெடுத்தார். கடந்த 25-ந்தேதி அந்த குழந்தையை ரூ.2½ லட்சத்துக்கு ஜெயகீதா மூலம் யாஸ்மின் விற்றார்.

இதற்கிடையே ஆட்டோவில் சென்றபோது தனது பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டதாகவும், குழந்தையையும் காணவில்லை என்றும் யாஸ்மின், சென்னை வேப்பேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

யாஸ்மின் நடத்திய நாடகம்

அதன்பேரில் வேப்பேரி உதவி கமிஷனர் நடேசன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். முதல்கட்டமாக ஜெயகீதாவை பிடித்தனர். அவர் மதுரையைச்சேர்ந்த ஒரு பெண்தான் குழந்தையை வாங்கிச்சென்றதாக சொன்னார். மதுரை பெண்ணையும் போலீசார் பிடித்தனர்.

ஆந்திராவைச் சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதி ரூ.2½ லட்சம் கொடுத்து குழந்தையை வாங்கிச்சென்றதாக முதலில் தெரிய வந்தது. ஆனால் போலீஸ் விசாரணையில் இந்த வழக்கின் கதை தலைகீழாக மாறியது.

குழந்தையின் தாய் யாஸ்மின் நாடகமாடியது அம்பலமானது. குழந்தையை விற்ற பணத்தை, ரவுடிகள் பிடுங்கிச்சென்றதாக யாஸ்மின் கொடுத்த புகார் பொய்யானது என்று கண்டறியப்பட்டது. அவர் வாங்கிச்சென்ற பணத்தில் வீட்டு வாடகை பாக்கியை கொடுத்துள்ளார். மேலும் அவர் ஏறிச்சென்ற ஆட்டோ டிரைவரும், யாஸ்மினிடம் யாரும் பணத்தை பிடுங்கவில்லை என்று மறுத்தார். பணத்தையும் அமுக்க வேண்டும், அதேசமயம் குழந்தையும் தனக்கு கிடைக்க வேண்டும், என்ற ஆசையில் இதுபோல் பொய்யான புகார் கொடுத்ததாக யாஸ்மின் ஒப்புக்கொண்டார்.

குழந்தை மீட்பு

மேலும் குழந்தையை ஆந்திர தம்பதிக்கு விற்றதாக சொன்ன தகவலும் பொய். சென்னை ஆயிரம் விளக்கைச் சேர்ந்த சிவகுமார் என்பவர்தான், குழந்தை இல்லாததால், குழந்தையை விலைக்கு வாங்கியது கண்டறியப்பட்டது. அவர் ரூ.3½ லட்சம் கொடுத்து குழந்தையை வாங்கி உள்ளார். ரூ.1 லட்சத்தை புரோக்கர்கள் எடுத்துக்கொண்டனர். மீதி ரூ.2½ லட்சம் மட்டும் யாஸ்மினிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

விற்கப்பட்ட குழந்தை மூலக்கொத்தளத்தில் வசிக்கும் சிவகுமாரின் மாமியார் வீட்டில் இருப்பது தெரிய வந்தது. உடனே இன்ஸ்பெக்டர் கண்ணன் அங்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டார். பின்னர் அந்த குழந்தை தொண்டு நிறுவனத்தில் ஒப்படைக்கப்பட்டது.

யாஸ்மின் உள்பட 4 பேர் கைது

குழந்தையை விலைக்கு வாங்கிய சிவகுமார், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் வேலை செய்கிறார். அதே அலுவலகத்தில் வேலை பார்த்த ஆரோக்கிய மேரி என்பவர்தான், குழந்தையை விலைக்கு வாங்கி கொ டுத்துள்ளார். அவரை போலீசார் தேடுகிறார்கள்.

குழந்தையை விற்று விட்டு, பணம் கொள்ளை போனதாக நாடகமாடிய யாஸ்மின், குழந்தையை வாங்கிய சிவகுமார் மற்றும் பெண் புரோக்கர்கள் ஜெயகீதா, தனலட்சுமி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story