கோவில் பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ள 7 வயது சிறுவன் கல்வி கற்க என்ன நடவடிக்கை? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி


கோவில் பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ள 7 வயது சிறுவன் கல்வி கற்க என்ன நடவடிக்கை? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 29 Nov 2021 11:18 PM GMT (Updated: 29 Nov 2021 11:18 PM GMT)

நீலகிரியில் குலதெய்வ கோவிலுக்கு பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ள 7 வயது சிறுவனுக்கு கல்வி வழங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், சிவன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “நீலகிரி மாவட்டம், நெடுக்காடு கிராமத்தில் படுகர் இன மக்களின் குலதெய்வ கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலின் பூஜை உள்ளிட்ட விழாக்களை அந்த இன மக்களே செய்து வருகின்றனர்.

இதற்காக அந்த கிராமத்தை சேர்ந்த 2-ம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுவன் பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ளான். இதனால், அந்த சிறுவன் பள்ளி செல்ல முடியாது. உணவை அவனே சமைத்து சாப்பிடவேண்டும். கோவில் பசுக்களின் பாலை கறந்து நெய் எடுத்து கோவில் விளக்குகளுக்குப் பயன்படுத்த வேண்டும். இந்த செயல் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்திற்கு எதிரானது” என்று கூறியிருந்தார்.

வெளியில் வரக்கூடாது

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், “அந்த மக்களின் மரபுப்படி சிறுவன் கோவிலை விட்டு வெளியில் வரக்கூடாது. தற்போது, தமிழகத்தில் வீடு தோறும் கல்வித்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால், அந்த வசதி அந்த சிறுவனுக்கும் வழங்கப்படும்” என்றார்.

இதையடுத்து, சிறுவன் கல்வி கற்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? என்பது குறித்து தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.

Next Story