சென்னையில் விட்டு விட்டு பெய்த மழை: தேங்கி கிடக்கும் தண்ணீரை அகற்றும் பணி தொடருகிறது


சென்னையில் விட்டு விட்டு பெய்த மழை: தேங்கி கிடக்கும் தண்ணீரை அகற்றும் பணி தொடருகிறது
x
தினத்தந்தி 30 Nov 2021 12:18 AM GMT (Updated: 30 Nov 2021 12:18 AM GMT)

சென்னையில் நேற்று அவ்வப்போது வெயில் தலைக்காட்டியது. விட்டுவிட்டு மழையும் பெய்தது. சென்னையில் பல இடங்களில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றும் பணி தொடருகிறது.

சென்னை,

குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடைவிடாது கனமழை பெய்தது. இதனால் சென்னை மாநகரம் ஒரே மாதத்தில் 3-வது முறையாக வெள்ளத்தில் சிக்கியது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைவெள்ள நீர் புகுந்தது.

சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம் முடிச்சூர், வரதராஜபுரம், செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூர், செம்மஞ்சேரி, ஐயப்பன்தாங்கல், மேடவாக்கம், பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், பெருங்களத்தூர், துரைப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், கேளம்பாக்கம் போன்ற பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.

இந்த பகுதிகள் நீர்நிலைகள் போன்று மாறி உள்ளது. தொடர்ந்து ஏரிகளின் உபரிநீர் வருவதால் வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கிறது. எப்போது மழை நின்று வெள்ளநீர் வடியும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அடையாறு ஆறு ஆக்ரோஷம்

சென்னையை பொறுத்தவரையில் மழைவெள்ளம் தேங்கிய இடங்களில் தண்ணீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி, தீயணைப்புத்துறை வீரர்கள் இரவு-பகலாக ஈடுபட்டு வருகின்றனர். மழைநீரை வெளியேற்றும் பணியில் 684 மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு பலனாக பல இடங்களில் தண்ணீர் வடிந்தது. ஆனால் கழிவுநீர் அடைப்பு பிரச்சினை உள்ள பகுதிகளில் மழைநீர் வடியாமல் தொடர்ந்து தேங்கி உள்ளது.

குறிப்பாக வடசென்னை பகுதியில் அடங்கி உள்ள ஆர்.கே.நகர், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை போன்ற பகுதிகளில் மழைநீர் வடியாமல் தொடர்ந்து குளம் போல் தேங்கி உள்ளது. சூளை, பட்டாளம் போன்ற பகுதிகளிலும் மழைநீர் இன்னும் வடியாமல் சூழ்ந்திருக்கிறது. கே.கே.நகரில் ராஜமன்னார் சாலை உள்பட பல தெருக்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சுகாதார சீர்கேடாக காட்சி அளிக்கிறது.

அடையார் கஸ்தூரிபாய் நகர் 3-வது பிரதான சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நந்தம்பாக்கம் கல்லறை வெள்ளநீரால் சூழப்பட்டுள்ளது. இந்த நீரை மோட்டார் பம்பு மூலம் வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பால் அடையாறு ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அடையாறு ஆறு ஆக்ரோஷத்துடன் சீறிபாய்ந்து செல்வதை பார்க்க முடிகிறது.

மழையும்..., வெயிலும்...,

சென்னையில் தேங்கிய மழைவெள்ள நீரை வெளியேற்றும் பணிக்கு திடீர் மழை சவாலாக அமைந்துள்ளது. அவ்வப்போது மழை பெய்வதால் தண்ணீரை அகற்றிய இடத்தில் மீண்டும் தண்ணீர் சூழும் நிலை காணப்படுகிறது.

சென்னையில் நேற்று காலை 9 மணி முதல் 9.30 மணி வரை கனமழை பெய்தது. பின்னர் மேகமூட்டம் மறைந்து வானம் தெளிவானது. சூரியன் தலைக்காட்டி வெயில் அடித்தது. காலை 10.30 மணியளவில் மீண்டும் கருமேகங்கள் சூழ்ந்து 15 நிமிடங்கள் இடைவிடாது மழை பெய்தது. பின்னர் கருமேகங்கள் மறைந்து லேசாக வெயில் அடித்தது. மதியம் 1 மணியளவில் வானம் மீண்டும் மேகமூட்டம் ஆனது. 1.30 மணியளவில் சரசரவென்று கனமழை பெய்தது. இந்த மழை சுமார் 25 நிமிடங்கள் நீடித்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மீண்டும் தண்ணீர் சூழ்ந்தது. சென்னையில் விட்டுவிட்டு பெய்த கனமழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்குவதும், அவற்றை வெளியேற்றுவதுமான நிலை தொடர்கதையாக உள்ளது.


Next Story