அந்தமான் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது


அந்தமான் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
x
தினத்தந்தி 30 Nov 2021 12:24 AM GMT (Updated: 30 Nov 2021 12:24 AM GMT)

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது. இது நாளை மறுதினம் (2-ந்தேதி) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சென்னை, 

குமரி கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் போன்ற தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடிப்பதால் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. இந்தநிலையில் தமிழகத்தில் டிசம்பர் 3-ந்தேதி வரையில் மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் நா.புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 30-ந்தேதி (இன்று) கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

டிசம்பர் 1-ந்தேதி (நாளை) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

2-ந்தேதி அன்று (வியாழக்கிழமை) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

3-ந்தேதி அன்று (வெள்ளிக்கிழமை) தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை இன்று (செவ்வாய்க்கிழமை) நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

இந்தநிலையில் அந்தமான் கடலில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இதுகுறித்து நா.புவியரசன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் (இன்று) புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் அதாவது 2-ந்தேதி (வியாழக்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். இதனால் தென்கிழக்கு, மத்திய வங்ககடல், அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசக் கூடும். எனவே 30-ந்தேதி (இன்று) முதல் மீனவர்கள் இந்த கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story