கனமழையால் பாதிக்கப்பட்ட: காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மு.க.ஸ்டாலின் ஆய்வு


கனமழையால் பாதிக்கப்பட்ட: காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
x
தினத்தந்தி 30 Nov 2021 12:26 AM GMT (Updated: 30 Nov 2021 12:26 AM GMT)

கனமழையால் பாதிக்கப்பட்ட காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டார்.

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 7-ந் தேதி தொடங்கி இரவு, பகல் பாராமல் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று சீரமைப்பு பணிகளைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காஞ்சீபுரம் மாவட்டம், வரதராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட பி.டி.சி. குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு, ஆய்வு செய்து, சீரமைப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும், அப்பகுதி மக்களிடம் பாதிப்புகளின் விவரங்களை கேட்டறிந்து அவற்றை சரிசெய்திட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார்.

நிவாரண உதவி

பின்னர், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்காக வரதராஜபுரம் ஊராட்சி, வேல்ஸ் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று, அங்கு தங்கியுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

பரத்வாஜ் நகர், பி.டி.சி. குடியிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மிக அதீத கனமழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் சுமார் 4 அடி உயரத்திற்கு தேங்கியிருந்த மழைநீரை மோட்டார் பம்புகள் மூலம் அகற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு, தற்போது மழைநீர் வடிந்து வருகிறது.

பாதிக்கப்பட்ட மக்கள் பைபர் படகுகளில் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அருகில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு 3 வேளை உணவும், தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது். காஞ்சீபுரம் மாவட்டத்தில் தற்போதுள்ள 25 முகாம்களில் சுமார் 930 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம்

பின்னர் செங்கல்பட்டு மாவட்டம், முடிச்சூர் ஊராட்சிக்குட்பட்ட அமுதம் நகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு, ஆய்வு செய்து, சீரமைப்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

பின்னர், தாம்பரம் மாநகராட்சி, வானியன்குளம், இரும்புலியூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்த விவரங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட வருவதை அறிந்த முடிச்சூர், ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்ட தங்கள் பகுதியையும் பார்வையிட வேண்டும் என்று வைத்த கோரிக்கையின் அடிப்படையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட ஜோதி நகரையும் பார்வையிட்டு, அங்கு தேங்கியுள்ள மழைநீரை துரிதமாக அகற்றிட மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு, பொதுமக்களிடம் தேவைப்படும் நிவாரண உதவிகள் குறித்து கேட்டறிந்தார்.

நிவாரண பணிகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி மிகவும் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை கண்டறிந்து 11 துறைகளைச் சார்ந்த அலுவலர்களை உள்ளடக்கிய 33 குழுக்களும், துணை கலெக்டர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் நகராட்சி ஆணையர்கள் நிலையில் 8 வட்டங்களுக்கும் வட்ட அளவிலான கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டு, சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

மேலும், கனமழையால் அதிகமாக பாதிக்கக்கூடிய பகுதிகளான முடிச்சூர், தாம்பரம், இரும்புலியூர், கூடுவாஞ்சேரி, தாழம்பூர், பெரும்பாக்கம், ஊரப்பாக்கம் ஆகிய பகுதிகளை கண்காணிக்க துணை கலெக்டர் நிலையில் 7 சிறப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு நிவாரண பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 44 முகாம்களில் சுமார் 2,313 நபர்கள் பாதுகாப்புடன் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டு வருவதுடன், அவர்களுக்கான அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.

இந்த ஆய்வின்போது, ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, கு.செல்வப்பெருந்தகை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மைச் செயலாளர் பி.அமுதா, டாஸ்மாக் மேலாண்மை இயக்குநரும், காஞ்சீபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான எல்.சுப்பிரமணியன், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆ.ர.ராகுல்நாத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story