தமிழகத்தில் எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!?


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 30 Nov 2021 2:45 AM GMT (Updated: 30 Nov 2021 3:45 AM GMT)

கனமழை காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, 

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது. இது நாளை மறுதினம் (2-ந்தேதி) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

குமரி கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் போன்ற தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடிப்பதால் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. இந்தசூழலில் தமிழகத்தில் டிசம்பர் 3-ந்தேதி வரையில் மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனமழை காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி கனமழை எதிரொலியால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தேனி, கடலூர், ராமநாதபுரம், நீலகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

திருப்பூர்: மழை காரணமாக தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருவள்ளூர், தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story