அம்மா மினி கிளினிக்குகளை மூடும் முயற்சியை கைவிடவேண்டும்- எடப்பாடி பழனிசாமி


அம்மா மினி கிளினிக்குகளை மூடும் முயற்சியை கைவிடவேண்டும்- எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 30 Nov 2021 7:28 AM GMT (Updated: 2021-11-30T12:58:34+05:30)

2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகளை மூடும் முயற்சியினை கைவிடவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தை எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தினார். படிக்கும் மாணவ செல்வங்கள் பசியால் பாதியில் தங்கள் படிப்பை நிறுத்திவிடக்கூடாது என்று அனைத்து மாணவர்களுக்கும் உணவளித்து, கடையேழு வள்ளல்களை தொடர்ந்து இந்த உலகில் 8-ம் வள்ளளாக திகழ்ந்தார். சத்துணவு திட்டத்தை கேலி பேசிய அப்போதைய தி.மு.க. தலைவர் 1989-ம் ஆண்டு முதல்-அமைச்சர் ஆன உடன் தொடர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்தினார்.

அதுபோலவே, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் தமிழக மக்களுக்கு செயல்படுத்திய பல மக்கள் நலத் திட்டங்களை மாணவ-மாணவியருக்கு விலையில்லா சைக்கிள், தாலிக்கு தங்கம், இலவச சீருடை, விலையில்லா மின்சாரம், தொட்டில் குழந்தை திட்டம் போன்ற பல திட்டங்களை மறைந்த தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சரான பிறகும் தொடர்ந்து செயல்படுத்தினார். ஆனால் இந்த தி.மு.க. அரசு பதவியேற்றதில் இருந்து ஜெயலலிதாவும், அ.தி.மு.க. அரசும் செயல்படுத்திய பல மக்கள் நல திட்டங்களுக்கு மூடு விழா நடத்தி வருகிறது.

கண்டனம்

விழுப்புரம் அம்மா பல்கலைக்கழகம், அம்மா உணவகம், தாலிக்கு தங்கம் (புதிய விதிமுறைகளை புகுத்துதல்), அம்மா இருசக்கர வாகன திட்டத்தை கைவிடுதல், அம்மா குடிநீர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். தற்போது அம்மா மினி கிளினிக்கை மூடும் விதமாக அங்கு பணிபுரியும் சுமார் 1,820 டாக்டர்களையும், 1,420 மருத்துவ பணியாளர்களையும் எதிர்வரும் வருகிற 4-ந்தேதி முதல் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த, மக்களால் மிகுந்த வரவேற்பை பெற்ற சிறந்த திட்டத்தை அரசு நிறுத்த நினைப்பது கடும் கண்டனத்துக்குரியது.

மூடும் முயற்சியை கைவிடவேண்டும்

தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நேரத்தில் தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று மிக அதிகமாக பரவி இருந்தது. அதனை கட்டுப்படுத்த இந்த விடியா அரசு, அம்மா மினிகிளினிக் டாக்டர்களை முழுமையாக பயன்படுத்திக்கொண்டது. கொரோனா நோய்த்தொற்று அதிகமுள்ள காலத்திலும், தங்களது உடல்நிலையினை கருத்தில்கொள்ளாமல், உண்மையான டாக்டர்கள் என்ற முனைப்போடு பணியாற்றி, கொரோனா நோய்த்தொற்றை தற்போது 3 இலக்க எண்ணிக்கையில் கட்டுக்குள் கொண்டு வந்த அம்மா மினி கிளினிக் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை தி.மு.க. அரசு வரும் டிசம்பர் 4-ந்தேதி முதல் பணி நீக்கம் செய்ய உள்ளதாக வெளியான செய்தி என்னை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த பணி நீக்க செய்தி, அம்மா மினி கிளினிக்கில் பணிபுரியும் டாக்டர்களின் தன்னலமற்ற சேவையினையும், மன உறுதியினையும் தகர்க்கும் வண்ணம் உள்ளது. எனவே 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகளை மூடும் முயற்சியினை கைவிட்டுவிட்டு அம்மா மினி கிளினிக்குகளில் பணிபுரியும் அனைத்து டாக்டர்களையும், மருத்துவ பணியாளர்களையும் தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கவேண்டும். மக்களின் உடல்நலத்தோடும், அவர்களின் வாழ்க்கையோடும், உயிரோடும் விளையாடுவதை உடனே கைவிடவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story