21 வயது கடக்காத மாப்பிள்ளை..! காதல் திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்...!


21 வயது கடக்காத மாப்பிள்ளை..! காதல் திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்...!
x
தினத்தந்தி 30 Nov 2021 12:32 PM GMT (Updated: 30 Nov 2021 12:32 PM GMT)

குளச்சலில் மாப்பிள்ளைக்கு 21 வயது ஆகாததால் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

நாகர்கோவில்,

கருங்கல் பகுதியை சேர்ந்த 20 வயது வாலிபர், கடந்த 2 ஆண்டுகளாக குளச்சலை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணை காதலித்து வந்தார். இவர்களது காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரிய வந்தது. இதனைதொடா்ந்து பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து குளச்சலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் 20 வயது வாலிபருக்கும், இளம்பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடக்க இருந்தது. ஆணின் திருமண வயது 21-ஐ தாண்டி இருக்க வேண்டும். ஆனால் மாப்பிள்ளைக்கு இன்னும் திருமண வயதை அடையவில்லை என்ற தகவல் மாவட்ட சமூக நல அதிகாரி சரோஜினி மற்றும் போலீசாருக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் சம்பந்தப்பட்ட திருமண மண்டபத்துக்கு விரைந்தனர். மேலும் அங்கிருந்த உறவினர்கள் மற்றும் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது வாலிபருக்கு 20 வயது தான் ஆகிறது என்பது உறுதியானது. இதனைதொடர்ந்து வாலிபருக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து இரு வீட்டாரும் வாலிபருக்கு 21 வயது முடிந்ததும் திருமணத்தை நடத்துவதாக கூறி எழுதி கொடுத்தனர். இருப்பினும் இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும், குளச்சல் அனைத்து மகளிர் போலீசிலும் அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். திருமண வயதை எட்டாத வாலிபரின் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story