‘பவர் பேங்க்’ செயலி மூலம் தமிழகத்தில் மோசடி: ரூ.150 கோடி வரை சுருட்டிய புகாரில் டெல்லி ஆடிட்டர் கைது


‘பவர் பேங்க்’ செயலி மூலம் தமிழகத்தில் மோசடி: ரூ.150 கோடி வரை சுருட்டிய புகாரில் டெல்லி ஆடிட்டர் கைது
x
தினத்தந்தி 30 Nov 2021 6:18 PM GMT (Updated: 1 Dec 2021 6:12 AM GMT)

‘பவர் பேங்க்’ செயலி மூலம் தமிழகத்தில் ரூ.150 கோடி வரை சுருட்டிய புகாரில் டெல்லி ஆடிட்டர் உள்பட 11 பேரை டெல்லி போலீசார் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.

சென்னை,

‘பவர் பேங்க்’ செயலியில் பண முதலீடு செய்பவர்களிடம் பண மோசடி நடப்பதாக புகார் எழுந்துள்ளது என்றும், எனவே இந்த செயலியில் யாரும் பண முதலீடு செய்ய வேண்டாம், என்றும் சி.பி.சி.ஐ.டி. சைபர்பிரிவு போலீசார் அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர். தற்போது தமிழகத்தில் அது போன்ற மோசடி வலையில் சிக்கி பணத்தை இழந்தவர்கள் கொடுத்த புகார் அடிப்படையில், சி.பி.சி.ஐ.டி. சைபர் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

டெல்லியில் ரூ.150 கோடி சுருட்டியதாக அவிக்கேடியா என்ற ஆடிட்டர் உள்பட 11 பேரை டெல்லி போலீசார் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், ஆடிட்டர் அவிக்கேடியா தமிழகத்தில் நடந்த மோசடியிலும் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அதன்பேரில் அவரை கைது செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திகார் சிறையில் இருந்து நேற்று முன்தினம் சென்னை அழைத்து வந்தனர்.

இதையடுத்து சைதாப்பேட்டை கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் அவரது மோசடி வலை எந்த அளவுக்கு விரிக்கப்பட்டுள்ளது என்பது பற்றி விசாரணை நடப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.

Next Story