வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் 3 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம்


வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் 3 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம்
x
தினத்தந்தி 1 Dec 2021 12:02 AM GMT (Updated: 1 Dec 2021 12:02 AM GMT)

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் 3 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரண உதவியை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

காஞ்சீபுரம் மாவட்டம், செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த கே.ஏகாம்பரம், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகாவைச் சேர்ந்த கே.கருப்பசாமி, தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகாவைச் சேர்ந்த பி.பழனிகுமார் ஆகியோர் ராணுவத்தில் பணியாற்றிய போது வீரமரணம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்களது குடும்பத்துக்கு கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியில் தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

ரூ.20 லட்சம் நிவாரணம்

இந்தநிலையில் ஏகாம்பரத்தின் மனைவி குமாரி, கருப்பசாமியின் மனைவி தமயந்தி, பழனிக்குமாரின் மனைவி பாண்டியம்மாள் ஆகியோரை சென்னை தலைமை செயலகத்துக்கு நேரில் வரவழைத்து ஆறுதல் கூறிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.20 லட்சம் நிவாரண உதவிக்கான காசோலையை வழங்கினார்.

மேலும், லடாக்-காரகோரம் கணவாயில் இருந்து மலரி வரை (ஜோஷிமத், உத்ரகாண்ட் மாநிலம்) பனிச்சறுக்கு மூலம் இந்திய ராணுவ வீரர்கள் சென்ற குழுவில் பங்கேற்ற முதல் தமிழக ராணுவ வீரரான திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கேப்டன் எஸ்.குபேர காந்திராஜின் சாதனையை கவுரவித்து மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் வெ.இறையன்பு, பொதுத்துறை செயலாளர் டி.ஜெகநாதன், பொதுத்துறை சிறப்பு செயலாளர் வி.கலையரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story