தூத்துக்குடியில் வடியாத வெள்ளம்: மழைநீரை வெளியேற்ற வலியுறுத்தி பொதுமக்கள் மறியல்


தூத்துக்குடியில் வடியாத வெள்ளம்: மழைநீரை வெளியேற்ற வலியுறுத்தி பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 2 Dec 2021 1:25 AM IST (Updated: 2 Dec 2021 1:25 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் 6 நாட்களாக வடியாத வெள்ளத்தால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். இதையடுத்து மழைநீரை வெளியேற்ற வலியுறுத்தி 3 இடங்களில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 25-ந்தேதி கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

தூத்துக்குடி மாநகர பகுதியில் முத்தம்மாள் காலனி, ரகுமத் நகர், ராம்நகர், ஆதிபராசக்தி நகர், தனசேகரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. கடந்த 6 நாட்களாக அந்த பகுதியில் மழைநீர் வடிந்த பாடில்லை. இதனால் தீவுகளில் வசிப்பது போன்று மக்கள் வீடுகளில் தவித்துக் கொண்டு இருக்கின்றனர்.

சாலை மறியல்

இந்தநிலையில் தூத்துக்குடி ராம்நகர் பகுதி மக்கள் தேங்கி உள்ள மழைநீரை அகற்றக் கோரி, தூத்துக்குடி- எட்டயபுரம் ரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மழைநீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதேபோன்று தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனி மற்றும் சுந்தரவேல்புரம் பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்றக் கோரி, அந்த பகுதி மக்கள் மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

விடுமுறை

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பெரும்பாலான பள்ளிக்கூட வளாகங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது.

இதனால் நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.

Next Story