கல்லூரி மாணவிகளிடம் தவறாக நடந்த பேராசிரியர் கைது


கல்லூரி மாணவிகளிடம் தவறாக நடந்த பேராசிரியர் கைது
x
தினத்தந்தி 2 Dec 2021 3:24 AM IST (Updated: 2 Dec 2021 3:24 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரி மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதுடன், பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை கைது செய்யக்கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றி வருபவர் தமிழ்ச்செல்வன். பூந்தமல்லியை அடுத்த திருமழிசையை சேர்ந்த இவர், ஆன்லைன் வகுப்பின் போதும், கல்லூரியில் வகுப்பு நடக்கும்போது மாணவிகளுக்கு செல்போனில் ஆபாசமாக குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்பி பாலியல் தொந்தரவு செய்ததாக மாணவிகள் புகார் தெரிவித்து நேற்று முன்தினம் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாணவிகளிடம் தவறாக நடந்ததாக பேராசிரியர் தமிழ்ச்செல்வன் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகள் 150-க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

போலீசார் பேச்சுவார்த்தை

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை கைது செய்ய வேண்டும் என மாணவ-மாணவிகள் கோஷமிட்டனர். கோயம்பேடு உதவி கமிஷனர் ரமேஷ்பாபு தலைமையிலான போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதற்கு மாணவர்கள், பேராசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்யும் வரையில் ஆர்ப்பாட்டத்தை கைவிடமாட்டோம் என உறுதியாக கூறிவிட்டனர்.

பேராசிரியர் கைது

பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் கொடுத்த புகாரின்பேரில் கல்லூரி நிர்வாகம் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் பேராசிரியர் தமிழ்ச்செல்வன் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அதை ஏற்று ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு மாணவ-மாணவிகள் கலைந்து சென்றனர்.

அதன்பிறகு சென்னையில் பதுங்கி இருந்த பேராசிரியர் தமிழ்ச்செல்வனை கோயம்பேடு போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். தமிழ்ச்செல்வனின் செல்போனை பறிமுதல் செய்து அதில் வேறு எந்த மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளாரா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story