வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வருபவர்கள் - தவறான தகவல் கொடுத்து தமிழகம் வந்தால் சட்டப்படி நடவடிக்கை


வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வருபவர்கள் - தவறான தகவல் கொடுத்து தமிழகம் வந்தால் சட்டப்படி நடவடிக்கை
x
தினத்தந்தி 1 Dec 2021 10:16 PM GMT (Updated: 1 Dec 2021 10:16 PM GMT)

வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வருபவர்கள் தவறான தகவலை கொடுத்து தமிழகத்துக்கு வந்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

சென்னை அண்ணாநகர் புறநகர் ஆஸ்பத்திரியில் சி.எஸ்.ஆர். நிதி பங்களிப்போடு அமைக்கப்பட்டுள்ள 2 ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கொள்கலனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

அப்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் சாந்திமலர், அண்ணாநகர் புறநகர் ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் கனி ஷேக் முகமது ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தன்னிறைவு பெற்றுள்ளது

தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி 270 கி.லி என்கிற அளவில் இருந்தது. ஆனால் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு 744.67 கி.லி. ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலைகள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பி.எம்.கேர்ஸ் நிதி பங்களிப்பில் 70 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஆக்சிஜன் வசதி என்பது மிகப்பெரிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் வசதியை பொறுத்த அளவில் தமிழகம் தன்னிறைவு பெற்று விளங்குகிறது.

சட்டரீதியாக நடவடிக்கை

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களை தொடர்ந்து கண்காணிக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தவறான தகவல் கொடுத்து விமானங்கள் மூலம் யாரேனும் தமிழகத்துக்கு வந்தால், சட்டரீதியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மரபணு பகுப்பாய்வு கூடங்களை பொறுத்தவரை புதிதாக 12 இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 80 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள காத்திருக்கின்றனர். வருகிற சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் தாமதிக்காமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

உருமாற்றம் அடைந்த வைரசான ஒமைக்ரான் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. விரைவில் ஒமைக்ரான் வைரசின் வீரியம் எந்த அளவு இருக்கிறது என்பது தெரியவரும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உலக எய்ட்ஸ் தினம்

இதற்கிடையே தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று சென்னை எழும்பூரில் உள்ள நலவாழ்வு மற்றும் குடும்ப நல பயிற்சி மையத்தில் நடந்தது.

இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு, விழிப்புணர்வு பதாகைகளை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் எழும்பூர் எம்.எல்.ஏ இ.பரந்தாமன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மைச்செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க இயக்குனர் ஹரிஹரன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் டாக்டர் எஸ்.குருநாதன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story