தமிழகத்தில் இதுவரை யாருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 2 Dec 2021 4:43 AM GMT (Updated: 2 Dec 2021 4:43 AM GMT)

தமிழகத்தில் இதுவரை யாருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தென் ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு (ஒமைக்ரான்) கண்டறியப்பட்டுள்ளது. இது அதிபயங்கர வைரஸ் என கருதப்படுவதால் பல நாடுகள் பயண கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்கா மட்டுமல்லாமல் சிங்கப்பூர், இஸ்ரேல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

ஒமைக்ரான் வைரஸ் பற்றி முழுமையாக தெரியவர சில வாரங்கள் பிடிக்கும் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. ஆர்.டி., பி.சி.ஆர்., பரிசோதனை மூலம் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இருக்கிறதா அல்லது பொதுவான கொரோனா பாதிப்பு உள்ளதா என்பது கண்டறிய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை யாருக்கும் ஓமைக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்திலும் இதுவரை யாருக்கும் ஓமைக்ரான் பாதிப்பு இல்லை. வெளிநாட்டில் இருந்து வந்த 477 பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் யாருக்கும் ஓமைக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை. 

வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வரும் பயணிகள் அனைவருக்கும் முதலில் காய்ச்சல் இருப்பதை கண்டறியப்படுகிறது. காய்ச்சல் 100 டிகிரி மற்றும் அதற்கும் மேல் இருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.  கொரோனா தொற்று இருக்கும் விமானப் பயணிகளுக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்களின் மாதிரிகளை மரபணு சோதனைக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. 

தமிழகத்தில் பள்ளி, சந்தை உள்பட கூட்டம் அதிகம் இருக்கும் 8 பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானால், அவர்களின் மாதிரிகளை தினமும் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இதுவரை யாருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

Next Story