சித்திரை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்ற நடைமுறை தொடர வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


சித்திரை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்ற நடைமுறை தொடர வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 2 Dec 2021 7:09 PM GMT (Updated: 2 Dec 2021 7:09 PM GMT)

பொங்கல் பரிசுப் பையில் தமிழ்ப்புத்தாண்டு வாசகம் இடம்பெற்றிருக்கும் நிலையில், சித்திரை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்ற நடைமுறை தொடர வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

பெட்ரோல் விலை குறைப்பு, டீசல் விலை குறைப்பு, ‘நீட்' தேர்வு ரத்து, மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை, மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உதவித்தொகை, கல்விக் கட்டணம் ரத்து, முதியோர் உதவித் தொகை உயர்வு, பழைய ஓய்வூதியத் திட்டம் என தி.மு.க.வால் அள்ளி வீசப்பட்ட வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும், வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் எப்போது வழங்கப்படும் என்று மக்கள் காத்திருந்த நிலையில், மக்கள் எண்ணத்திற்கு முற்றிலும் மாறான வகையில், 2022-ம் ஆண்டு பொங்கல் பரிசுப் பையின் முகப்பில் “இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டு இருப்பது தமிழக மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் விதமாக அமைந்துள்ளது.

தமிழ்நாட்டிலே பல நூற்றாண்டுக் காலமாக சித்திரை மாதப் பிறப்புதான் தமிழ்ப் புத்தாண்டு தினமாக தமிழக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது காலம் காலமாக கடைபிடிக்கப்படுகின்ற மரபு. இந்த மரபினை முற்றிலும் சீர்குலைக்கும் விதமாக, எவ்வித வலுவான ஆதாரமும் இல்லாமல், மக்களின் உணர்வுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், ‘தை மாதம் முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு' என்பதற்கு வழிவகை செய்யும் சட்டம் முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில், 2008-ம் ஆண்டு இயற்றப்பட்டது.

ஜெயலலிதாவிடம் கோரிக்கை

சட்டம் இயற்றப்பட்டும், தமிழ்நாட்டு மக்கள் சித்திரை முதல் தேதியையே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி வந்தனர்.

இந்த தருணத்தில், ஜெயலலிதா 2011-ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றவுடன், ‘தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு' என்பதற்கு வழிவகுத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுக்கள் தமிழ்நாட்டு மக்களால் ஜெயலலிதாவிடம் அளிக்கப்பட்டன.

சட்டம் ரத்து

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த ஜெயலலிதா, தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்திற்கு மாறாக இயற்றப்பட்ட சட்டத்தை நீக்கும் வகையில், தமிழ்நாடு தமிழ்ப்புத்தாண்டு (விளம்புகை) நீக்கச் சட்டமுன்வடிவை 23-8-2011 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றி அதனைச் சட்டமாக்கினார்கள். இந்த சட்டத்தின்படி, தை முதல் நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு என்கிற சட்டம் ரத்து செய்யப்பட்டது.

எனவே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களின் உணர்ச்சிகளுக்கு, கருத்துகளுக்கு மதிப்பளித்து, சித்திரை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்ற நடைமுறை, மரபு, கலாசாரம் தொடர்ந்திடவும், பொங்கல் பரிசுப் பையின் முகப்பில் “தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்” என்ற வாசகங்களை குறிப்பிட்டு தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு எதிராக உள்ளதை நிறுத்திடவும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story