ஒமைக்ரான் வைரஸ்; விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
ஒமைக்ரான் வைரஸ் பரவாமல் தடுக்க விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கொரோனாவில் இருந்து உருமாற்றமடைந்த ஒமைக்ரான் வைரஸ் தொற்று தென்ஆப்பிரிக்காவில் தோன்றி பிற நாடுகளிலும் பரவி வருகிறது. புதிதாக உருவெடுத்துள்ள இந்த ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
இதனால் இந்தியா மற்றும் தமிழகத்திலும் தொற்று பாதிப்பு பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இன்று சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் ஏற்படாமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
11 நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பரிசோதனையின் முடிவில் கொரோனா இல்லை என முடிவு வந்தாலும், அவர்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
கொரோனா பரிசோதனைக்கு கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ள பயணிகளுக்கு அரசே கட்டணத்தை ஏற்கும். சென்னை, திருச்சியில் ஒமைக்ரான் உறுதியானதாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல் தவறு. ஒமைக்ரான் கொரோனா பாதிப்பு தமிழகத்திற்குள் இன்னும் வரவில்லை.”
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story