தென் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்


தென் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
x
தினத்தந்தி 3 Dec 2021 12:59 PM IST (Updated: 3 Dec 2021 12:59 PM IST)
t-max-icont-min-icon

அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பசலனம் காரணமாக தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவிற்கு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே சமயம் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா-தெற்கு ஒரிசா கடலோர பகுதியை நாளை காலை நெருங்கக் கூடும் என்றும் தொடர்ந்து வடக்கு-வடகிழக்கு திசையில் ஒடிசா கடற்கரையை ஒட்டி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, வடக்கு ஆந்திரா மற்றும் ஒரிசா கடலோர பகுதிகளில் புயல் காற்று மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Next Story