1 முதல் 8 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புதுவையில் 6 ந்தேதி பள்ளிகள் திறப்பு 9 முதல் 12 வரை முழுநேர வகுப்புகள்
புதுவையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும். 9 முதல் 12 வரையிலான மாணவர்களுக்கு முழு நேர வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி
புதுவையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 6-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும். 9 முதல் 12 வரையிலான மாணவர்களுக்கு முழு நேர வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் 2- வது அலை பாதிப்பு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது.
தொற்று குறைந்தது
புதுவையில் கடந்த மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. ஆனால் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
இந்தநிலையில் தொற்று குறைந்ததை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் 9, 10, 11, 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன.
இதற்கிடையே 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவது எப்போது? என்ற எதிர்பார்ப்பு பெற்றோர் மற்றும் மாணவர் மத்தியில் எழுந்தது.
மழையால் தள்ளிப்போனது
இதுகுறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து கடந்த (நவம்பர்) மாதம் 8-ந்தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் சுழற்சி முறையில் வகுப்புகளை தொடங்குவது என்று அறிவிக்கப்பட்டது.
இதையொட்டி அரசு சார்பில் வகுப்புகள் தொடங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன.
ஆனால் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புதுவையில் ஒருமாதமாக பலத்த மழை பெய்தது. இதனால் ஏற்கனவே அறிவித்தபடி 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டு தள்ளிப்போனது.
தற்போது மழை ஓய்ந்ததால் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று அரசுக்கு பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக ஏற்கனவே பரிசீலித்து வந்தநிலையில் கல்வித்துறை செயலாளர் அசோக்குமார், இயக்குனர் ருத்ரகவுடு ஆகியோருடன் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் மீண்டும் ஆலோசனை நடத்தினார்.
இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாளை மறுநாள் முதல்...
புதுச்சேரியில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன.
இந்தநிலையில் செப்டம்பர் மாதம் 1-ந் தேதியில் இருந்து 9 முதல் 12-ம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன. இதையடுத்து நவம்பர் மாதம் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க முடிவு எடுத்தோம். புதுச்சேரியில் பெய்த தொடர் மழையால் பள்ளிகளை திறக்க முடியவில்லை.
இந்தநிலையில் 6-ந் தேதி (நாளை மறுநாள்) 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு அரை நாள் மட்டும் சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் இயங்கும். மாணவர்கள் வகுப்புகளுக்கு வரவேண்டும் என்பது கட்டாயம் இல்லை. ஆன்லைன் மூலமாகவும் வகுப்புகள் நடைபெறும்.
முழுநேர வகுப்புகள்
ஏற்கனவே 9 முதல் 12-ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் நடந்து வருகின்றன. இனி 6-ந் தேதி (நாளை மறுநாள்) முதல் ஒருநாள் விட்டு ஒருநாள் முழுநேர வகுப்புகளாக செயல்படும். இந்த மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும்.
1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு நேர வகுப்புகள் தொடங்கிய பிறகு மதிய உணவு வழங்கப்படும். மாணவர்கள் சிறப்பு பஸ்சை இயக்குவதற்கு டெண்டர் விடும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் மாணவர் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எடுத்த கணக்கெடுப்பின்படி 95 சதவீதம் ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். மீதமுள்ளோரையும் தடுப்பூசி போட அறிவுறுத்தியுள்ளோம். தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே பள்ளிகளில் அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்
புதுச்சேரி கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில் அந்த இடங்கள் நிரப்பப்படும். ஏற்கனவே பள்ளிகள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களை வரவேற்க தயாராக உள்ளோம்.
புதிய வகை ஒமைக்ரான் தொற்று உலக அளவில் தற்போது ஆரம்ப நிலையில் தான் உள்ளது. பெற்றோர்கள் கண்டிப்பாக பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
ஆன்லைன் வகுப்புகளை கவனிப்பதால் மாணவர்கள் முழுமையாக கல்வி அறிவு பெற சிரமம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்தின்படி தற்போது பள்ளிகளை திறக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story