புதுச்சேரியில் ஒமைக்ரான் சிறப்பு வார்டு சிகிச்சைக்கு 100 படுக்கைகள் தயார்
ஒமைக்ரான் வைரஸ் பாதித்தால் சிகிச்சை அளிக்க 100 படுக்கைகளுடன் புதுச்சேரியில் ஒமைக்ரான் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி
ஒமைக்ரான் வைரஸ் பாதித்தால் சிகிச்சை அளிக்க 100 படுக்கைகளுடன் புதுச்சேரியில் ஒமைக்ரான் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
ஒமைக்ரான்
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை கட்டுக்குள் வந்தநிலையில் தற்போது தினமும் பாதிக்கப்படுவோரின் சராசரி எண்ணிக்கை 30 ஆக இருந்து வருகிறது.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இது உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் நேற்று முன்தினம் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதன் மூலம் இந்தியாவுக்குள்ளும் நுழைந்துள்ளது.
இதையொட்டி வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என சுகாதாரத்துறைக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தினார்.
புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி, சுகாதாரத்துறை அதிகாரிகளிடம், ஒமைக்ரான் வைரஸ் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் விரிவான சிகிச்சைக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
சிறப்பு வார்டு ஏற்பாடு
அதன்படி புதுச்சேரியில் தற்போது கொரோனாவால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் வைரஸ் பாதித்தவர்கள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க இங்கு சிறப்பு வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு கூறியதாவது:-
ஒமைக்ரான் வைரஸ் என்பது தனியான தொற்று கிடையாது. அது உருமாறிய கொரோனா தான். வெளிநாடுகளில் இருந்து புதுச்சேரிக்கு வருபவர்களை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணித்து தேவையான பரிசோதனைகள் மேற்கொள்வார்கள்.
மாநில எல்லைகளில் காவல்துறையுடன் இணைந்து சோதனைகள் நடத்த உள்ளோம். ரெயில் நிலையங்களிலும், பஸ் நிலையங்களிலும் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளிடம் சோதனை நடத்தப்படும்.
100 படுக்கைகள் தயார்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நெஞ்சக நோய் மருத்துவமனையில் 160 படுக்கைகள் உள்ளது. இதில் தற்போது 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய 100 படுக்கைகளை தயார் நிலையில் வைத்துள்ளோம். தேவைப்பட்டால் அந்த எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும். பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.
கொரோனாவுக்கு செய்யப்படும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைதான் ஒமைக்ரான் வைரசை கண்டறியவும் செய்யப்படும். இதுதொடர்பான நவீன ஆய்வகங்கள் அரசு மருத்துவமனைகளில் உள்ளன. இதன் மூலம் ஒரே நேரத்தில் 99 பேருக்கு பரிசோதனை செய்து 2 மணி நேரத்தில் முடிவுகளை அறிய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story