தமிழக அரசுக்கு எதிராக பேசியதாக பா.ஜ.க. மாவட்ட தலைவர் கைது


தமிழக அரசுக்கு எதிராக பேசியதாக பா.ஜ.க. மாவட்ட தலைவர் கைது
x
தினத்தந்தி 3 Dec 2021 9:06 PM GMT (Updated: 4 Dec 2021 1:13 AM GMT)

தமிழக அரசுக்கு எதிராக பேசியதாக பா.ஜ.க. மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர்,

அரியலூரில் கடந்த புதன்கிழமையன்று பா.ஜ.க. சார்பில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட மாவட்ட பா.ஜ.க. தலைவர் அய்யப்பன், தமிழக அரசுக்கு எதிராக பேசியதாக கூறப்படுகிறது.

6 பிரிவுகளின் கீழ் வழக்கு

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கடந்த புதன்கிழமையன்று பா.ஜ.க. சார்பில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாவட்ட பா.ஜ.க. தலைவர் அய்யப்பன், தமிழக அரசுக்கு எதிராக பேசியதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து வாலாஜாநகரம் கிராம நிர்வாக அலுவலர் கனகராஜ் அரியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கலகம் செய்ய தூண்டுவது, அரசுக்கு அச்சுறுத்தும் வகையில் பேசுவது, வன்முறையை தூண்டும் வகையில் பேசுவது, கும்பலாக சேர்ந்து மிரட்டுவது, பொதுமக்களை குற்றம் செய்ய தூண்டும் வகையில் பேசுவது, உயிர் போக்கும் குற்றம் உள்ளிட்டவை அடிப்படையில் 153, 153(ஏ), 153(பி), 504, 505(பி), 506 ஆகிய 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கைது

இதையடுத்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலை கதிரவன் தலைமையிலான போலீசார் நேற்று காலை ஜெயங்கொண்டம் வேலாயுத நகரில் உள்ள அய்யப்பன் வீட்டிற்கு வந்தனர். அங்கு அவரை போலீசார் கைது செய்து, கீழப்பழுவூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இதையடுத்து அரியலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவரை அரியலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சந்திரசேகர் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர்.

சிறையில் அடைப்பு

அப்போது பா.ஜ.க. தரப்பில் ஆஜரான வக்கீல்கள், ‘ஆர்ப்பாட்டத்தின்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று பேசுவதற்கு பதிலாக தற்கொலை தாக்குதல் என வாய் தவறி பேசியதாகவும், எனவே அவரை சிறையில் அடைக்கும் அளவிற்கு எந்த குற்றத்தையும் செய்யவில்லை’ என்றும் வாதத்தை முன் வைத்தனர். வாதத்தை கேட்டறிந்த பின்னர், அய்யப்பனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி அய்யப்பனை ஜெயங்கொண்டம் கிளை சிறையில் போலீசார் அடைத்தனர்.

முன்னதாக அரசு மருத்துவமனை மற்றும் நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு மதன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்தனர். அய்யப்பனை நீதிமன்றத்தில் இருந்து சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்றபோது, கைதை கண்டித்து பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் வக்கீல்கள் கோஷமிட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story