2-வது மனைவி வாலிபருடன் பேச்சு... நடத்தையில் சந்தேகப்பட்டு 3 பேரை கொலை செய்த கணவர்...


2-வது மனைவி வாலிபருடன் பேச்சு... நடத்தையில் சந்தேகப்பட்டு 3 பேரை கொலை செய்த கணவர்...
x
தினத்தந்தி 4 Dec 2021 5:36 PM IST (Updated: 4 Dec 2021 5:36 PM IST)
t-max-icont-min-icon

மைசூருவில் நடத்தையில் சந்தேகப்பட்டு கர்ப்பிணியான 2-வது மனைவி, தம்பதியை படுகொலை செய்தவர் கைது செய்யப்பட்டார். இவர் முதல் மனைவி கொலை வழக்கில் சிறைக்கு சென்று ஜாமீனில் வந்தவர் ஆவார். இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மைசூரு,

மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா நவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஈரய்யா. தொழிலாளியான இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத் தகராறில் முதல் மனைவியை கொன்றுவிட்டு சிறைக்கு சென்றார். இதையடுத்து ஜாமீனில் வெளியே வந்த ஈரய்யா, மகாேதவம்மா என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். 

தற்போது மகாதேவம்மா 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் மகாதேவம்மா, பக்கத்து வீட்டை சேர்ந்த மாதய்யா(வயது 70) என்பவரின் மகனுடன் சிரித்து பேசுவதை ஈரய்யா பார்த்துள்ளார். இதனால் அவர்களுக்குள் கள்ளத்தொடர்பு இருக்கும் என்று அவர் சந்தேகித்தார். இதுதொடர்பாக மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

அதேபோல், சம்பவத்தன்று இரவு ஈரய்யா, மனைவி மகாதேவம்மாவிடம் தகராறு செய்துள்ளார். இதையறிந்த பக்கத்து வீட்டுக்காரரான மாதய்யா, அவரது மனைவி நிங்கம்மா(50) ஆகியோர், ஈரய்யாவின் வீட்டிற்கு சென்று தனது மகனுடன், உனது மனைவிக்கு கள்ளத்தொடர்பு இல்லை, தேவையில்லால் சந்தேகிக்காதீர்கள் என்று புத்திமதி கூறிவிட்டு சென்றுள்ளனர்.

இதையடுத்து வெளியே சென்ற ஈரய்யா, மது அருந்தி குடிபோதையில் வீட்டிற்கு மீண்டும் வந்தார். பின்னர் அவர் மனைவியுடன் தகராறு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த ஈரய்யா, கர்ப்பிணி என்றுகூட பாராமல் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மகாதேவம்மாவை குத்தினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்த மாதய்யா, அவரது மனைவி நிங்கம்மா மற்றும் அவர்களது மகன், ஈரய்யாவின் தாய் கவுரம்மா ஆகிய 4 பேரும் ஈரய்யாவை தடுக்க முயன்றனர். 

ஆனாலும் போதை தலைக்கேறிய ஈரய்யா, அவர்களையும் கத்தியால் சரமாரியாக குத்தினார். இந்த சரமாரி தாக்குதலில் கர்ப்பிணியான மகாதேவம்மா, நிங்கம்மா, மாதய்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 2 பேரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நஞ்சன்கூடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் நஞ்சன்கூடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கொலையான 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவி மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த தம்பதி ஆகிய 3 பேரையும் ஈரய்யா கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அங்கிருந்த ஈரய்யாவை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது குடிபோதையில் இருந்த ஈரய்யா, போலீசாரை தாக்க முயன்றார். சுதாரித்து கொண்ட போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து நஞ்சன்கூடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நஞ்சன்கூடுவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story