திருநள்ளாறு குளத்தில் புனித நீராடிய பக்தர்கள்
தடை இருந்தபோதிலும் திருநள்ளாறு நளன்குளத்தில் பக்தர்கள் உற்சாகமாக புனித நீராடினர்.
காரைக்கால்
தடை இருந்தபோதிலும் திருநள்ளாறு நளன்குளத்தில் பக்தர்கள் உற்சாகமாக புனித நீராடினர்.
சனீஸ்வரர் கோவில்
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் புகழ்பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக் கணக்கான பக்தர்களும், சனிப் பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
கொரோனா தொடர் ஊரடங்கு காரணமாக, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வழிப்பாட்டு தலங்களில் இயல்பாக சாமி தரிசனம் செய்யமுடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் தமிழகம், புதுச்சேரியில் கொரோனா தொற்று குறைந்ததால் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
குறிப்பாக திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் நளன்குளத்தில் நீராடிவிட்டு ஆடைகளை குளத்தின் கரையில் உள்ள தொட்டியில் போட்டு செல்வார்கள்.
குளத்தில் குளிக்க தடை
ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நளன் குளத்தில் புனிதநீராட கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்த தடை இதுவரை நடைமுறையில் உள்ளது. அதற்கு ஏற்றாற் போல், நளன் குளத்தில் தண்ணீர் இரைக்கப்பட்டு, சீரமைப்பு பணி நடைபெற்று வந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் நளன் குளத்தில் புனிதநீராடாமல் ஏமாற்றத்துடன் திரும்பிசென்றனர்.
இதற்கிடையே கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து சனீஸ்வரர் கோவிலுக்கு வருகைதரும் பக்தர்களின் நலன் கருதி, முன்னோர்கள் கூறிவந்த ஐதீக முறைப்படி, நளன்குளத்தில் புனித நீராட, கோவில் நிர்வாகம் அனுமதிக்கவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் கோவில் நிர்வாகம் தடையை நீடித்து வந்தது.
புனித நீராடல்
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக நளன் குளத்தில் தண்ணீர் நிரம்பியது. தற்போது அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் பலர் மாலை அணிந்திருப்பதால், சனீஸ்வரன் கோவிலுக்கு வரும் போது, நளன் குளத்தில் நீராடி செல்கின்றனர்.
நேற்று சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் நளன் குளத்தில் புனித நீராடினர். நளன் குளத்தில் குளிக்க தடை இருந்தபோதிலும் கோவில் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதனால் பக்தர்கள் உற்சாகமாக புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். இருப்பினும் நளன்குளத்தில் புனிதநீராட முறைப்படி அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.
Related Tags :
Next Story