வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த 6 பேருக்கு கொரோனா - சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
தமிழகத்தில் இதுவரை யாருக்கும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கொரோனாவில் இருந்து உருமாற்றமடைந்த ஒமைக்ரான் வைரஸ் தொற்று தென்ஆப்பிரிக்காவில் தோன்றி பிற நாடுகளிலும் பரவி வருகிறது. புதிதாக உருவெடுத்துள்ள இந்த ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் இந்திய மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்களில் இதுவரை 5 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவர்களுக்கு தீவிர பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஒமைக்ரான் பரவலை தடுக்கும் விதமாக வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு தீவிர பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“ஒமைக்ரான் கொரோனா வைரஸ் குறித்து பதற்றம் தேவையில்லை. ஆனால், அதை தடுக்க 2 தவணை தடுப்பூசியை கட்டாயம் போடவேண்டும். தனி நபர் இடைவெளியைப் பின்பற்றி, கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் எனும் விழிப்புணர்வு அவசியம்.
கடந்த 2 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து வந்த 4,500 பேரை சோதனை செய்துள்ளோம். அதில் இதுவரை 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்களுக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இல்லை. ஒமைக்ரான் தொற்று என்பது பதற்றம் அடையக் கூடிய உருமாற்றம் இல்லை.
மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள், தடுப்பூசி முகாம்களை பயன்படுத்தி செலுத்திக் கொள்ள வேண்டும்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story