வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5 கொரோனா நோயாளிகளுக்கும் ‘ஒமைக்ரான்’ பாதிப்பு இல்லை


வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5 கொரோனா நோயாளிகளுக்கும் ‘ஒமைக்ரான்’ பாதிப்பு இல்லை
x
தினத்தந்தி 5 Dec 2021 10:20 PM GMT (Updated: 5 Dec 2021 10:20 PM GMT)

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்களில் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட 5 கொரோனா நோயாளிகளுக்கும் ‘ஒமைக்ரான்’ பாதிப்பு இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை,

ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு தீவிர பரிசோதனைகள் நடந்து வருகிறது. அந்தவகையில் தமிழகத்திலும் இந்த பரிசோதனைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

இதில் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வந்த 5 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டறியும் பரிசோதனைகள் நடந்து வருகிறது.

இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

10 வயது சிறுமி

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த 56 வயது நபர், இங்கிலாந்தில் இருந்து சென்னை வந்த 10 வயது சிறுமி மற்றும் 32 வயது பெண் என 3 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர்களில், 32 வயது பெண்ணுக்கு மீண்டும் மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்ததால், அவர் கும்பகோணத்தில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதைப்போல இங்கிலாந்தில் இருந்து வந்த நாகர்கோவிலை சேர்ந்த 50 வயது பெண், சென்னை வந்த 25 நபர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒமைக்ரான் இல்லை

மேலும் சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்த 43 வயது நபர் ஒருவருக்கு மேற்கொணட பரிசோதனையிலும் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. விமான நிலையத்தில் இருந்து திடீரென மாயமான அவரை நாகர்கோவிலில் உள்ள அவரது வீட்டில் சுகாதாரத்துறையினர் கண்டுபிடித்து அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.

இவர்கள் 5 பேருக்கும் மேற்கொண்ட முதற்கட்ட பரிசோதனையில், அவர்களுக்கு ‘ஒமைக்ரான்’ பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. டெல்டா பாதிப்பு தான் உள்ளது.

படுக்கைகள் தயார்

எனினும் அபாயகரமான நாடுகளில் இருந்து இவர்கள் வந்துள்ளதால், இவர்களது மாதிரிகள் பெங்களூரில் உள்ள ‘இன்ஸ்டாம்’ பகுப்பாய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்களில் இறுதி முடிவு தெரிந்துவிடும்.

ஒமைக்ரான் பாதிப்புக்காக அனைத்து ஆஸ்பத்திரிகளிலும், 200-ல் இருந்து 300 படுக்கை வசதிகள் தற்போது தயாராக உள்ளன. ஒமைக்ரான் வைரஸ் 30 நாடுகளுக்கு மேல் பரவி உள்ளது. இதில் யாருக்கும் ஆக்சிஜன் தேவையோ, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நிலையோ அவசியம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

வீடு தேடி தடுப்பூசி

தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசியை 80.44 சதவீதம் பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 47.46 சதவீதம் பேரும் போட்டுள்ளனர். நாளை (இன்று) முதல் வீடு தேடி சென்று தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வருகிற சனிக்கிழமை 14-வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற இருக்கிறது. இதுவரை நடந்த 13 மெகா தடுப்பூசி முகாமில் 2 கோடியே 43 லட்சத்து 24 ஆயிரத்து 138 பேருக்கு போடப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Next Story